| ADDED : செப் 13, 2026 01:52 AM
தேனி, மேகமலை புலிகள் காப்பக பகுதியில் வசிக்கும், 98 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், வனத்துறையால் எந்நேரமும் வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். அவர்களை, பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் பேசுகையில், 'இப்பகுதியில் பல தலைமுறைகளாக மக்கள் வசித்து, விவசாயம் செய்கின்றனர். தற்போது திடீரென ஆக்கிரமிப்பாளர்கள் என கூறி, வெளியேற்ற நினைப்பது அநீதி. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு இப்பிரச்னையை உடனடியாக கொண்டு சென்று, பா.ஜ., தீர்வு காண நடவடிக்கை எடுக்கும். 'வனத்துறையின் கெடுபிடிகளை தடுத்து நிறுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாவி மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றால், பா.ஜ., சார்பில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்' என்றார். இதை கேட்ட கிராமவாசி ஒருவர், 'இந்த பிரச்னையில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லைங்கிற மாதிரியே பேசுறாரே' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.