தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி: வாக்காளர்
பட்டியலில் நிறைய பேரின் பெயர்கள் விடுபட்டிருப்பதை தேர்தல் கமிஷன்
பார்த்திருக்க வேண்டும். தி.மு.க., சார்பில் நாங்கள் பலமுறை தேர்தல்
கமிஷனில் இது குறித்து வலியுறுத்தினோம். கடைசியாக நடந்த தேர்தல் கமிஷன்
கூட்டத்தில் கூட, விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் என
கூறினோம். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.அதெல்லாம் சரி... விடுபட்ட வாக்காளர்களில் எத்தனை சதவீதம் பேர் தி.மு.க.,விற்கு ஆதரவானவர்கள் என்பதை சுட்டிக்காட்ட முடியுமா? தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், மாற்றங்களுடன் கூடிய, வெளிப்படையான தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவோம் என நிர்மலா சீதாராமன் கூறுகிறாரே' என்பவர்கள் தான், அதே உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு தேவை என்று உத்தரவிட்டும், அதை ஏற்காமல், நீட் தேர்வு தேவையில்லை என கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர்.உப்பு சப்பில்லாத விஷயம் முதல், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரை எல்லாத்துலயும் தங்களுக்கு சாதகமானதை பற்றி மட்டும் தான் பேசுவாங்கன்னு இவருக்கு தெரியாதா?தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: பிரதமர் மோடிக்கு பாடம் புகட்டும் வகையில், தமிழகத்தில் தேர்தல் முடிந்துள்ளது. தமிழகத்தில் இண்டியா கூட்டணி வெற்றியை உறுதி செய்ய பிரசாரம் செய்த காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் ஆகியோருக்கு நன்றி.ஓட்டுப்பதிவு மட்டும் தானே முடிஞ்சிருக்கு... அதுக்குள்ள மோடிக்கு பாடம் புகட்டும் வகையில்னு எந்த நம்பிக்கையில் சொல்றாரு?பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: சென்னை, கண்ணகி நகரில் கஞ்சா விற்பவர்களை கைது செய்ய சென்ற போலீசார், சரமாரியாக தாக்கப்பட்டுள்ளனர். கும்பகோணத்தில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள், அரசு பஸ் ஓட்டுனரை கடுமையாக தாக்கி உள்ளனர். கஞ்சா அடிமைகளால் தமிழகத்தில் போலீசார், அரசு பஸ் ஓட்டுனர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என, யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் கவலையை ஏற்படுத்தி உள்ளது.கஞ்சா வியாபாரிகள், போலீ சாரையே அடித்து ஓட விடுறாங் கன்னா, தமிழகம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்வதை ஆட்சியாளர்கள் உணரணும்!