னைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:தி.மு.க.,வின் மூன்றாண்டு ஆட்சியில், ஜாதி பிரச்னைகள், லாக்கப் மரணங்கள், சட்டம் - ஒழுங்கு சீரழிவு, போதை பொருள் விற்பனை, மது போதையால் பல்வேறு குடும்ப மற்றும் சமூக அவலங்கள், கனிம வளங்கள் கொள்ளை, எல்லா துறைகளிலும் லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், விலைவாசி உயர்வு, சொத்து வரி, பத்திரப்பதிவு, மின் கட்டணம் உயர்வு என மக்கள் அன்றாடம் அல்லல்மிக்க வாழ்வை நடத்திக் கொண்டிருக்கின்றனர். மூன்றாண்டு ஆட்சி. கொலைகள் அதிகமானதே சாட்சி.இந்த மாதிரி பிரசாரத்தை எல்லாம் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வினர் செய்யணும்... ஆனா, அடக்கி வாசிக்கிறாங்களே!தமிழக மகளிர் காங்., தலைவர் ஹசீனா சையது அறிக்கை: சமூக மாற்றத்துக்கான ஒரு சீரிய சித்தாந்தத்தை முன்னெடுத்து, அதன் வழியில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டவர்கள் தமிழக மகளிர் போலீசார். பெண் என்பதால், சவுக்கு சங்கர் எதை வேண்டுமானாலும் பேச முடியாது. பெண்களின் சுயமரியாதைக்கு இழுக்கு என்றால், தமிழக மகளிர் காங்கிரசார் தெருவில் இறங்கி போராட தயாராக உள்ளோம்.இப்பல்லாம், காங்கிரஸ் கட்சி போராட்டத்துலயே நான்கைந்து பேருக்கு மேல் யாரும் இருக்கிறதில்ல... மகளிர் காங்கிரஸ் எப்படி?சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி பேட்டி: திருநெல்வேலியில், காங்., மாவட்ட தலைவர் மரணம் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு ஒருவர் மீது தாக்குதல், கொடுக்கல்-வாங்கல் தகராறு போன்ற பிரச்னைகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது. மத, இன கலவரத்திற்கு மட்டுமே அரசு பொறுப்பேற்க முடியும். தனி நபர் பிரச்னையால் ஏற்படும் மோதலை தடுக்க முடியாது. மாவட்ட காங்., தலைவர் கேட்ட பாதுகாப்பை போலீசார் தராம விட்டது, இவருக்கு குற்றமா படலையா?தமிழக அரசு போக்குவரத்து பணியாளர் சம்மேளன பொதுச் செயலர் பத்மநாபன் பேட்டி: போக்குவரத்து தொழிலாளர்களின், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சை உடனே துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு, 2023 செப்., 1 முதல் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். டிரைவர், கண்டக்டர்கள், பஸ்கள் மீது தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசின் கஜானா காலியா இருக்கிறதால, ஊதிய ஒப்பந்த பேச்சை எல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க!