அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிக்கை: தமிழகத்திற்கு
கிடைக்க வேண்டிய காவிரி நீரை தருவதற்கு கர்நாடக அரசு பிடிவாதமாக மறுத்து
வருகிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல், கர்நாடகாவை சேர்ந்த
சோமண்ணா, மத்திய ஜல்சக்தி துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மர
நிழலில் மரம் வளராது என்பதை போல, தமிழகத்திற்கு அவரால் எப்படி நியாயம்
கிடைக்கும் என, தமிழக மக்கள் கேள்வி கேட்கின்றனர். தமிழக பா.ஜ., தலைவர்களும் இதை எதிர்த்து குரல் கொடுக்காமல், கமுக்கமாக இருக்காங்களே! பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படவில்லை. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமடையவில்லை. அங்கு மழை பெய்தால் தான், மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க முடியும். அதுவரை குறுவை சாகுபடியை தாமதித்தால், வடகிழக்கு பருவ மழையில் சிக்கி பயிர்கள் சேதமாகும் ஆபத்துள்ளது. எனவே, விதைகள், உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் உள்ளிட்டவற்றை மானியத்தில் வழங்கும் குறுவை தொகுப்பு திட்டத்தை, தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.தேர்தலில் 40க்கு 40 ஜெயித்த மகிழ்ச்சியில், டெல்டா விவசாயிகளை அரசு மறந்துடக் கூடாது!அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: காங்கிரஸ் மேலிட தலைவர்கள் வழியே, கர்நாடக அரசுக்கு அரசியல் ரீதியாக உரிய அழுத்தத்தை கொடுத்து, தமிழகத்திற்கான காவிரி நீரை முழுமையாக பெற முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அ.ம.மு.க., சார்பாக, தமிழகம் முழுதும் விவசாயிகளை ஒன்று திரட்டி, போராட்டம் நடத்தப்படும்.மாநிலத்தையே கிடுகிடுக்க வைக்கிற அளவுக்கு இவர் நடத்தப் போற போராட்டத்துக்கு பயந்தாவது, முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: கோவையில், முத்துகுமார் என்ற தனியார் நிறுவன, பணியாளர், 'ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 'ஆன்லைன் சூதாட்டம் திறமையின் அடிப்படையிலானது அல்ல; அது வாய்ப்புகளின் அடிப்படையிலானது' என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க தமிழக அரசு தவறி யதால் தான், ஆன்லைன் சூதாட்டம் மீதான தடை நீக்கப்பட்டது. தீக்குள் விரலை விட்டால் சுடுவது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு உண்மை, ஆன்லைன் ரம்மி ஆடினால் நஷ்டம் மட்டும் தான் வரும் என்பதும்!