உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேட்டி: மூன்றாவது
முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு, விவசாயத்துக்கு முக்கியத்துவம்
தர வேண்டும். தொழில்கள் போன்றே விவசாயத்தையும் மற்றொரு கண்ணாக நினைக்க
வேண்டும். நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் நீர் ஆதார திட்டங்களை உடனடியாக
நிறைவேற்ற வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகள் விவசாயத்தை மேம்படுத்த
முயற்சிக்க வேண்டும்.பஞ்சாப், தமிழகம் போன்ற மாநிலங்களின் லோக்சபா
தேர்தல் முடிவுகளை மத்திய அரசு ஆராய்ந்து பார்த்தாலே, விவசாயிகள் பக்கம்
தன் கவனத்தை திருப்பும் என நம்பலாம்! தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: கோவையில் தி.மு.க.,வுக்கு ஒரு சென்டிமென்ட் உண்டு. கடந்த 2010ல் உலகத்தமிழ் மாநாடு எனக்கூறி, உண்மையான உலக தமிழ் மாநாட்டை புறக்கணித்து, இவர்கள் ஒன்றை நடத்தினர். அது தான் தி.மு.க.,வுக்கு கடைசி மாநாடு. பத்து ஆண்டுகளுக்கு தலைமை செயலகம் பக்கம் செல்ல முடியாமல் போனது. இப்போதும் ஒரு மாநாடு போட்டுள்ளனர். வரும் 2026ல் அப்படி ஆக வேண்டும் என நினைக்கின்றனர் போல் தெரிகிறது. ஜெயிச்சவங்க வெற்றி விழா கொண்டாடுறாங்க... ஒரு இடத்தில் கூட ஜெயிக்காதவங்க, அதை கிண்டல் பண்றது முறையா?முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: நாகப்பட்டினம் நகரில் வசிக்கும் மக்களின் துன்பங்களை புரிந்து கொண்டும், நேரத்தின் அருமையை கருத்தில் வைத்தும், நிதி குறித்து யோசிக்காமல், மக்களின் உயிரை மட்டும் கவனத்தில் வைத்து, 150 ஆண்டு கால நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை, நாகை நகரில் தொடர்ந்து முழு வீச்சில் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாகை போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் மருத்துவ வசதியை இன்னும் மேம்படுத்தணுமே தவிர, இருப்பதை இழுத்து மூடக் கூடாது! தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: யோகாவை அனைத்து மாநிலங்களிலும், வீடுதோறும் கொண்டு செல்லும் பிரதமர் மோடியின் செயல் திட்டங்களில், தமிழக மக்கள் முழுமையாக பங்கெடுத்து, ஆரோக்கியத்துடன், ஆனந்தத்துடன் வாழ, முதல்வர்ஸ்டாலின் அரசு உறுதுணையாக செயல்பட வேண்டும். தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளில், உலக யோகா தினம் கொண்டாட ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும்.அரசியலுக்கு அப்பாற்பட்டு, இதுபோன்ற விஷயங்களில் தமிழக முதல்வர் செயல்பட்டால் நன்றாக இருக்கும்!