தி.மு.க., வர்த்தகர் அணி மாநில செயலர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் அறிக்கை: தி.மு.க.,
அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் தர வேண்டும் என, பா.ஜ., -
எம்.எல்.ஏ., வானதி கேட்கிறார். பெரும்பான்மை பெற்ற தி.மு.க., ஏன் கூட்டு
மந்திரி சபை அமைக்க வேண்டும். அது தான் சிறந்தது என நீங்கள் கூறினால்,
2014ல் இவர்கள் கூட்டணியில் வென்ற அன்புமணிக்கு ஏன் தரவில்லை?அதானே,
2006ல் மைனாரிட்டி அரசாக செயல்பட்ட போதே, கூட்டணி கட்சிகளுக்கு
அமைச்சரவையில் இடம் தராமல் ஆட்சியை நிறைவு செய்த பெருமை தி.மு.க.,வுக்கு
உள்ளதே!தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: கொடைக்கானல் மலைப்பகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ், தன் வீட்டை நீர்வரத்து ஓடையை ஆக்கிரமித்து கட்டியுள்ளார். உள்ளாட்சி அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். வாயை திறந்தாலே யோக்கியர் போல் பேசும் பிரகாஷ்ராஜ், பொது சொத்தை ஆக்கிரமித்து தன் வீட்டை கட்டியும், இதுவரை அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்குரியது.அதெப்படி... போற ஊர்ல எல்லாம் பா.ஜ.,வையும், பிரதமர் மோடியையும் விமர்சிக்கிற பிரகாஷ் ராஜ் மேல, திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்துடுமா என்ன?த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை: தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, பள்ளி மாணவர்கள் முதல் கல்லுாரி மாணவர்கள் வரை போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதை தடுக்க எந்த நடவடிக்கையும், ஆளும் அரசு மேற்கொள்ளவில்லை. கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காகவே டாஸ்மாக் மது விற்கப்படுவதாக அரசு கூறி வருகிறது. ஆனாலும், கள்ளச்சாராய விற்பனைக்கும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்.'ஓடி ஒளிபவன் அல்ல நான்' என முதல்வர் சொல்லி இருக்கிறாரே... ஏதாச்சும் செய்வார் பொறுங்க!முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: ஆளும் கட்சியினரின் அமோக ஆதர வுடன், மணல் கொள்ளை தமிழகத்தில் நடப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., நிலையில் உள்ள அதிகாரியை கொலை செய்ய, மணல் கொள்ளையர்கள் முயற்சிக்கின்றனர் என்றால், அந்த அளவுக்கு ஆளும் கட்சி ஆதரவு அவர்களுக்கு இருக்கிறது. அரசு அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு கைப்பிடி மணல் கூட ஆற்றில் இருந்து அள்ளாதது போல சொல்றாரே!