முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ்
அறிக்கை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின்
குற்றவாளிகளை, ஏழு நாட்களுக்குள் சுற்றி வளைத்து, 'என்கவுன்டர்' வரை
தமிழக காவல் துறை சென்றது. ஆனால், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை
மட்டும், ஏழு ஆண்டுகளாக துாங்க வைத்து தாலாட்டுவது ஏன்?சட்டசபை தேர்தல் நேரத்தில், அதை துருப்பு சீட்டா பயன்படுத்தலாம்னு ஆளும் தரப்பு அடக்கி வாசிக்கிறதோ?மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்., தலைவர் சிவராஜசேகரன் அறிக்கை: ராகுல், ஸ்டாலின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப இரண்டு கட்சியினரும் களப்பணியாற்றி வருகின்றனர். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சி வளர்ச்சிக்காக பேசும் கருத்துகளை பொதுவெளியில் சர்ச்சைக்குள்ளாக்குவது ஏற்புடையதல்ல.அது சரி... தி.மு.க., தயவில்லாம இவரால் சென்னை மாநகராட்சி கவுன்சிலராகி இருக்க முடியுமா... அந்த விஸ்வாசத்துல பேசுறார்!தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: துணை முதல்வர் பதவி அமைச்சர் உதயநிதிக்கு வழங்கப்படுமானால், அதை மூத்த அமைச்சரும், தி.மு.க., பொதுச் செயலருமான துரைமுருகனுக்கு வழங்க வேண்டும் அல்லது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு தான் உரிமை என்றால் தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழிக்கு வழங்க வேண்டும். அப்படி இல்லை என்றால், வாரிசு அரசியல் தான் தி.மு.க.,வின் திராவிட மாடல் என, ஒப்புக்கொள்ள வேண்டும்.துரைமுருகன், கனிமொழி மீது இவருக்கு என்ன கடுப்பு... அநியாயத்துக்கு அவங்களை, 'கோர்த்து' விடுறாரே!அ.தி.மு.க., - எம்.ஜி.ஆர்., இளைஞரணி முன்னாள் துணைச் செயலர் கே.சீனிராஜ் அறிக்கை: தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பழனிசாமி தலைமையில் நடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு பயன் தரும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. சட்டம் - ஒழுங்கு அவர்களின் இரும்பு கரங்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. இரும்புக்கரம் கொண்ட பழனிசாமி ஆட்சியில் தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் கோடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை எல்லாம் நடந்துச்சு தெரியுமா?