உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பா.ஜ., மாநில பொதுச்செயலர், ராம சீனிவாசன் பேட்டி: அ.தி.மு.க.,வில் அநாகரிக கலாசாரம் உள்ளது. முன், அதன் பொதுச்செயலர் பழனிசாமி, 'கள்ள உறவு' என பேசினார். இன்று கவர்னரை, 'காதலர்கள்' என செல்லுார் ராஜு விமர்சித்து உள்ளார். இதுபோன்ற வார்த்தைகளை பொது வெளியில் தவிர்க்க வேண்டும். கவர்னர் ரவி, தி.மு.க., அரசின் குறைகளை ஆரம்பத்தில் இருந்தே சுட்டிக் காட்டுகிறார். தற்போது, மழை பாதிப்புகளுக்கு, தி.மு.க., அரசு நடவடிக்கை மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். பாரபட்சம் இல்லாமல் கவர்னர் செயல்படுவதை பாராட்ட வேண்டும்.இவங்க புகைச்சலோ, என்னமோ... அரசோடு உறவாடிய கவர்னர், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தால் மீண்டும் அரசை முறைச்சிக்கிட்டாரே!நடிகர் விஜயின், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் பேச்சு: முதலில் ரசிகர் மன்றம், பின், நற்பணி மன்றம், மக்கள் இயக்கம் என, இன்று, அரசியல் இயக்கமாக மாறி உள்ளோம். தற்போது, அரசியல் பயணத்தில் உள்ளோம். எங்கு பார்த்தாலும் நம் கட்சி கொடி பறக்கிறது. தாய், தந்தை காலில் மட்டுமே விழ வேண்டும். மற்றவர்கள் காலில் விழக்கூடாது. நம்மை பார்த்து அரசியல் தெரியுமா என்கிறார்கள். இனி, நம்மை பார்த்து மற்றவர்கள் அரசியல் கற்றுக் கொள்ளும் இயக்கமாக நாம் இருப்போம்.இவர் பேசிய கூட்டத்தில், மகளிர் அணி நிர்வாகி குத்தாட்டம் போட்டதையும், 'பிளையிங் கிஸ்' கொடுத்ததையும் மற்றவர்கள் கத்துக்கணும்னு சொல்றாரா?பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி: கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் கல்வி, சுகாதாரத் திற்கு ஒதுக்கிய நிதியை விட, தற்போது, தி.மு.க., ஆட்சியில் குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை மற்றும் சுகாதாரத் துறை சீரழிய, போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாதது தான் காரணம். இதனால், ஆசிரியர்கள் நியமனம் குறைவாக உள்ளது. முதன்மை மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை. அப்ப, திராவிட மாடல் ஆட்சியை விட, பழனிசாமி ஆட்சி பிரமாதம்னு நற்சான்று கொடுக்கறீங்களா?ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேச்சு: தமிழகத்தில் பிராமண சமுதாயத்திற்கு எதிரான விமர்சனங்கள், நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. இதற்கு எதிராக அனைத்து சமூகத்தினரும் ஒன்று திரள வேண்டும். எந்த சமூகத்தையும் இழிவுபடுத்தும் செயலை கைவிட வேண்டும். ஹிந்து தர்மம் காக்கப்படுகிறது என்றால், அது, பிராமணர் சமூகத்தால் தான். அதனால், அச்சமூகத்தை காக்க, ஷத்திரியர்கள் தான் போராட வேண்டும். பிராமணர் சமூகத்தின் நிலை, நாளைக்கு நமக்கும் வரும் என்பதை உணர்ந்து, மற்ற சமூகத்தினர் தோள் கொடுத்து நிற்கணும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி