தி.மு.க., துணை பொதுச் செயலர் பொன்முடி பேட்டி: தமிழகத்தில்
காலுான்ற முடியாததால், பா.ஜ., வினர், பிரதமர் மோடியை அழைத்து வந்துள்ளனர்.
பிரதமருக்கு ஆங்கிலம் தெரிந்தாலும், ஹிந்தியை புகுத்த வேண்டும்
என்பதற்காகவே பொதுக்கூட்டத்தில் ஹிந்தியில் பேசியிருக்கிறார். தமிழ் மொழி
மீது ஆர்வம் என அவர் கூறுவது, தமிழர்களை ஏமாற்றும் நாடகம். பிரதமர் மோடி
எத்தனை முறை தமிழகம் வந்தாலும், இங்கு பா.ஜ.,வால் காலுான்ற முடியாது.இது
போங்காட்டமா இருக்கே... அப்ப, தமிழகத்தில் கை, கால் எல்லாம் ஊன்றிவிட்ட
காங்கிரசார் ராகுல், சோனியாவை எல்லாம் அழைச்சிட்டு வர மாட்டாங்களா?அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்களில், போதிய தண்ணீரின்றி நிலவிய வறட்சி காரணமாக, நெல் மகசூல் பெருமளவு குறைந்ததால், அனைத்து வகையான அரிசியின் விலையும், கிலோ ஒன்றுக்கு 12 - 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால் உணவகங்களில், உணவு வகைகளின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.'அம்மா' உணவகங்களின் அருமையும், அதை உருவாக்கிய ஆட்சியாளர்களின் பெருமையும் இப்ப தான் மக்களுக்கு புரியும்!அ.தி.மு.க., அமைப்பு செயலர் ஆனந்தன் பேச்சு: அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்களுக்கு, 'ஸ்டிக்கர்' ஒட்டி, திறப்பு விழா நடத்தி, போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் ஆட்சியாக தி.மு.க., ஆட்சி உள்ளது. மக்களுக்கு அளித்த, 520 வாக்குறுதிகளில், 25 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்கள் முதல் அனைவரும் போராட்டம் நடத்தக்கூடிய மோசமான ஆட்சி நடந்து வருகிறது.கடந்த 2015ல் ஏற்பட்ட சென்னை பெருவெள்ளத்தில், தன்னார்வலர்கள் கொடுத்த நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டி, போட்டோவுக்கு போஸ் கொடுத்தது யாரு?தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி: மத்தியில், காங்., ஆட்சியில் இருந்த போது வழங்கப்பட்ட நிதியை விட, மூன்று மடங்கு கூடுதலாக நிதி வழங்கப்படுவதாக பிரதமர் கூறியிருக்கிறார். நிதியை மட்டும் மூன்று மடங்கு உயர்த்தவில்லை. விலைவாசியும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. சமையல் காஸ், 350 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. லிட்டர் 50 ரூபாயாக இருந்த பெட்ரோல், டீசல் 100 ரூபாயை தாண்டி உள்ளது.தனி நபர் வருமானம், அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு தரும் பணம்னு எல்லாமே நாளுக்கு நாள் உயர்ந்துட்டு தானே இருக்கு!