உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: சுயமரியாதை இயக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன்' என, உணர்ச்சி பெருக்கோடு பேசியுள்ளார். அதே நேரத்தில் அரசு மருத்துவர்களை, தங்கள் ஊதிய உயர்வுக்காக தொடர்ந்து போராட வைக்கும் ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது என்பதை, நம் முதல்வருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். இவர் நினைவுபடுத்தி தான், முதல்வருக்கு அது தெரியுமா என்ன? புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி பேட்டி: வரும் 2026 சட்டசபை தேர்தலையொட்டி, மதுரையில் எங்கள் கட்சியின் மாநாடு நடத்தப்படும். அதில், எங்களது அரசியல் நிலைப்பாடு குறித்து கோடிட்டு காட்டப்படும். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு பெற்றால் தான் ஜாதி, மத, இன பாகுபாடு இல்லாமல் பணிபுரிய முடியும். மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஆட்சி அமைக்க வேண்டும். தமிழக மக்களுக்கு உண்மையாக பாடுபடக்கூடிய கட்சியை கண்டறிந்து, கூட்டணி சேர்வோம். தமிழக மக்களுக்கு உண்மையாக பாடுபடக்கூடிய கட்சின்னு பார்த்தால், கண்ணுக்கெட்டிய துாரம் வரைக்கும் இவருக்கு எந்த கட்சியும் தட்டுப்படாது! தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை: தமிழகம் முழுதும் மக்கள் மழை எனும், 'மாரி'யால் பாதிக்கப்பட்டு செய்வதறியாது, கைகளை பிசைந்து கொண்டிருக்கும் போது, அவர்களை முதல்வர் சென்று பார்க்கவில்லை. திரையில் பைசன் படத்தை பார்த்து மகிழ்ந்து, இயக்குநர், 'மாரி'யின் கைகளை பற்றி கொண்டிருக்கிறார். மக்கள், 'மாரி'யில் நனைந்து இயங்க முடியாமல் இருக்கும் போது, 'மாரி'யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கான காலம் இதுவல் ல. தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் தான் தமிழ்ல புகுந்து விளையாடினார் என்றால், புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை இவங்களும் நிரூபிக்கிறாங்களே! தமிழருவி மணியன் தலைமையிலான காமராஜர் மக்கள் கட்சியின் பொதுச்செயலர் குமரய்யா அறிக்கை: பண்டிகை காலங்களில், 'டாஸ்மாக்' விற்பனையை அதிகரிக்க காட்டிய ஆர்வத்தை மழை வெள்ளத் தடுப்பு மேலாண்மைகளிலும், நெல் கொள்முதல் மேலாண்மையிலும் தி.மு.க., அரசு காட்டவில்லை. 'அ.தி.மு.க., ஆட்சியில், 700மூட்டைகள் வந்தன. இப்போது, 1,000 மூட்டைகள் வந்துள்ளன. இதனால், கிடங்கு வசதி போதவில்லை' என, விளக்கம் தரும் அமைச்சர் பெருமக்களை பெற தமிழகம் என்ன தவம் செய்தது என தெரியவில்லை. யாரும் தவம் செய்யலை... இவங்களுக்கு முன்பிருந்தவங்க செய்த தவறுகளால் இவங்க வந்தாங்க... இவங்க செய்யும் தவறுகளால், அவங்க வருவாங்க... இந்த சுழற்சியை மாத்தவே முடியாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
அக் 29, 2025 18:55

நெல் மூட்டைகளை அடுக்க கிடங்கு வசதி போதவில்லையென்றால் அண்ணா அறிவாலயத்தில் அடுக்கி நனையாமல் காப்பாற்றி திமுகயரசு பெயர் தட்டிக்கொண்டு போயிருக்கலாம்.


முக்கிய வீடியோ