தமிழக, பா.ஜ., செய்தி தொடர்பாளர், ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: ஓட்டு வங்கி அரசியலுக்காக, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், புனித கார்த்திகை தீபத்தை ஏற்ற விடாமல் சதி செய்து தடுத்து, அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக செயல்பட்ட, மதவெறி, தி.மு.க., அரசு மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையின் வளர்ச்சியை தடுக்கும் வகையில், மதவெறியோடு, தி.மு.க., அரசு நடத்தும் சூழ்ச்சி அரசியலை உடனடியாக நிறுத்த வேண்டும்.இப்ப, தி.மு.க., அரசு மீது மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால், தேர்தலில் அவங்களுக்கு தான் அது சாதகமாக அமையும் என்பதை மறந்துடாதீங்க! காங்கிரஸ் கட்சியின் தகவல் பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி அறிக்கை: நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும், தங்கள் தலைவர்களின் பொதுக்கூட்டங்களுக்கு அதிக கூட்டத்தை வரவழைக்க அதிக நேரம், பணத்தை செலவழிக்கின்றன. ஆனால், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜயோ, தன் பேரணிகளில் பங்கேற்போர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற, நேர் எதிரான பிரச்னையை சந்தித்து கொண்டிருக்கிறார். இது, மிகவும் முரண்பாடானது. உங்க தலைவர் ராகுலுக்கு கூடாத கூட்டம், விஜய்க்கு கூடுவது தான், அவரை நோக்கி உங்க பார்வையை திருப்பியிருக்குதோ? தமிழக, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேச்சு: திருப்பூர் மாநகராட்சியின் குப்பையை, பக்கத்தில் உள்ள கிராமங்களில் கொண்டு வந்து கொட்டுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. மாநகர பகுதியிலேயே அவற்றை திடக்கழிவு மேலாண்மை செய்வதற்கான கட்டமைப்புகள் இருந்தும், அவற்றை முறையாக பயன்படுத்தவில்லை. குப்பையை வைத்து பெரிய லஞ்ச சாம்ராஜ்யத்தை, திருப்பூர் மாநகராட்சி நடத்தி வருகிறது. அது சரி... தமிழகம் முழுக்க இருக்கும் மற்ற மாநகராட்சிகள்ல நேர்மையான நிர்வாகம் நடக்குதா என்ன? பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: நாட்டில் உள்ள கல்லுாரிகள், பல்கலைகள் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் மும் மொழிகள் கற்பிக்கப்படுவதை கட்டாயமாக்கி, யு.ஜி.சி., எனப்படும், பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. இது, கடும் கண்டனத்திற்குரியது. தமிழக உயர் கல்வி நிறுவனங்களில், மூன்றாம் மொழிக்காக கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பது சாத்தியமல்ல. எனவே, மாணவர்கள், மூன்றாவது மொழியாக, ஹிந்தியை கற்கும் நிலை ஏற்படும். இது, மறைமுகமான ஹிந்தி திணிப்பு தான். எனவே, மூன்றாம் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கையை, யு.ஜி.சி., திரும்ப பெற வேண்டும். 'நம்ம மாணவர்கள் எப்போதும், கிணற்று தவளைகளாகவே இருக்கணும்' என்று சொல்லாம சொல்றாரோ?