உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த திட்டமிட்டுள்ள மத்திய அரசின் முடிவை, தி.மு.க., வரவேற்றுள்ளது. இதுவே, தமிழக சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணியின் வெற்றிக்கு அச்சாரம். மத்திய அரசின் அறிவிப்பால், சட்டசபை தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் ஓட்டுகள், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு, 100 சதவீதம் கிடைக்கும். அறிவிப்பு மட்டுமே ஓட்டுகளா மாறிடும்னு அசால்டா இருந்துடாம, களத்துல இறங்கினால் தான் இவரது கனவு நனவாகும்! முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலருமான டாக்டர் சரவணன் அறிக்கை: தமிழக அரசின் கடன் இன்று, 9.30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது. 2021ல், தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'தமிழகத்தின் கடன் சுமையைக் குறைக்க குழு அமைக்கப்படும்' என கூறி, ஆட்சிக்கு வந்ததும், குழு அமைத்தனர். அந்த குழுவின் அறிக்கையை பின்பற்றினரா? நான்கரை ஆண்டு ஆட்சியில், தி.மு.க.,வினர் ஊழல் செய்த, 4 லட்சம் கோடி ரூபாயை மீட்டு அரசு கஜானாவில் சேர்த்தாலே, தமிழகத்தின் கடன் சுமை பாதியாக குறைந்து விடும். இந்தியாவில், உள்ள எல்லா மாநிலங்களிலும், ஆளுங்கட்சியினர் செய்த ஊழல் பணத்தை மீட்டா, நாட்டின் ஒட்டுமொத்த கடனையும் அடைச்சிட்டு, பக்கத்து நாடுகளுக்கும் கடன் கொடுக்கலாமே! தி.மு.க., செயற்குழு உறுப்பினரும், சென்னை மாநகராட்சி கவுன்சிலருமான தனசேகரன் பேச்சு: தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதிகள் மட்டுமல்லாமல், மற்ற தொகுதிகளிலும் உள்ள கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளனர். எனவே, மீண்டும் தி.மு.க., ஆட்சி அமையும். ஸ்டாலின், இரண்டாவது முறை முதல்வராக பதவியேற்பார். அப்படியென்றால், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியில் இருந்து, 'புரமோஷன்' ஏதும் கிடையாதா? அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி: முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, மாவட்டம் வாரியாக மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி, பெட்டியில் போட்டு பூட்டினார். அந்த பெட்டியின் சாவி எங்கே? அந்த பெட்டியை திறந்து பார்த்தாலே, மக்களின் கனவு என்னவென்று தெரியுமே? அதை பார்க்க நேரம் இல்லாமல், தன் மகன் உதயநிதியை முதல்வராக்குவதற்காக, 'உங்கள் கனவை சொல்லுங்கள்' என்ற திட்டத்தை முதல்வர் துவக்கியுள்ளார். அதாவது, 15 வயசுல சைக்கிள் கேட்கிற பசங்க, 20 வயசுல பைக் கேட்பதில்லையா... அதனால, முதல்வரும் புதிய கனவுகளை கேட்கிறார் போலும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி