தமிழக, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டி: த.வெ.க., தலைவர் விஜயை
சாதாரணமாக எடை போடவில்லை. ஏன், நாம் தமிழர் கட்சியின் தலைமை
ஒருங்கிணைப்பாளர் சீமானையும் குறைத்து எடை போட முடியாது. தேர்தல் களத்தில்
யாரையும் சாதாரணமாக எடை போட முடியாது. தேர்தல் நெருங்கி வரும் வரை, எந்த
கட்சியும், பிற கட்சிகளை பகைத்துக் கொள்ளாது என்பது நாட்டு மக்கள் நன்கு
அறிந்தது தானே... அதனால், சீமான் அல்ல, பிற கட்சிகளையும், அதன்
தலைவர்களையும், பா.ஜ., கூட்டணி சேரும் வரை குறைத்து மதிப்பிடாது!சிவகங்கை லோக்சபா தொகுதி, காங்., - எம்.பி., கார்த்தி பேட்டி: தமிழக ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கூறி வருவது புதியது அல்ல. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இருக்கும் பொதுவான விருப்பம் தான். கடந்த, 1967 முதல், ஆட்சியில் காங்கிரஸ் இல்லை என்பதால், இன்று எதிர்பார்ப்பு சற்று பலமாக உள்ளது. இப்போ, புதுசா கட்சி துவக்கியிருக்கிற விஜயிடம், காங்., பேச்சு நடத்தி வருகிறது என கூறப்படுகிறதே... அவர் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்தால், காங்கிரசுக்கு ஆட்சி, அதிகாரத்தில் அவர் பங்கு கொடுப்பாரா? தமிழக அரசு அறிக்கை: முந்தைய நடைமுறைப்படி, புயல், மழை, வெள்ளத்தின் போது, 33 சதவீதத்திற்கு மேல் சேதமடைந்த பயிர்களுக்கு, ஹெக்டேருக்கு, 8,500 ரூபாய்; பாசன பயிர்களுக்கு, 17,000 ரூபாயும் வழங்கப்பட்டது. அந்த தொகை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ஹெக்டேருக்கு, 20,000 ரூபாயை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் அடித்த, 'டிட்வா' புயலின் போது சேதமான பயிர்களுக்கான இழப்பீடு தொகையும், தேர்தல் நேரம் என்பதால், உயர்ந்து விட்டதா? பகுதி நேர ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சு: அமைச்சர் அன்பில் மகேஷுடன் நாங்கள் நடத்திய பேச்சு, தோல்வியில் முடிந்து விட்டது. கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெளியிட்ட வாக்குறுதி, 181ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். 'தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியை நம்பி, மோசம் போயிட்டோம்'னு சொல்றீங்க... தேர்தலுக்கு இன்னும், 2.5 மாசம் தான் இருக்கு. அடுத்த வாக்குறுதி அறிக்கை வெளியிட அந்த கட்சி தயாராயிடிச்சு. இந்த தேர்தல்லயாவது சுதாரிக்கிறீங்களான்னு பார்ப்போம்! பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி: சொந்த வேலை காரணமாகவே நான், சென்னைக்கு சென்றிருந்தேன்; சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்காக சென்னை செல்லவில்லை. விரைவில் தேர்தல் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன். 'தி.மு.க.,வுடன் இணைவது குறித்து, பேச்சு நடத்த தானே சென்னை சென்றீர்கள்...' என கேட்கும், பா.ம.க., தொண்டர்களின் மனக்குரல் உங்களுக்கு கேட்கவில்லையா டா க்டர்?