உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் உதயகுமார் அறிக்கை: சமீபத்தில், '11 மதுபானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன' என கூறி, அவற்றை, 'டாஸ்மாக்' கடைகளுக்கு, 'சப்ளை' செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. 'உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது' என, உணவு கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட அந்த மதுபானங்களை திரும்ப விற்பனை செய்யலாம் என, 15 மணி நேரத்தில் அடுத்த உத்தரவு வருகிறது. த.வெ.க., அரசின் பார்வை இப்போது லாப நோக்குடன் செயல்படுகிறது. அதனால் தான், 51,000 கோடி ரூபாயாக இருந்த மதுபான விற்பனையை, இந்த நிதியாண்டில் 56,000 கோடி ரூபாயாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. எம்.எல்.ஏ.,க்களுக்கு கார், மாசம் 1 லட்சம் ரூபாய் பராமரிப்பு தொகை வழங்கும் செலவை எல்லாம், மது விற்பனையை அதிகரித்து ஈடு செய்ய பார்க்கிறாங்களோ?அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: 'தமிழகம் முழுதும் குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், 134 கோடி ரூபாய் மதிப்பில், முதல்வர் விஜயால் அறிவிக்கப்பட்ட குறுவை தொகுப்பு, இன்று வரை வந்து சேரவில்லை' என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். த.வெ.க., அரசின் இந்த அலட்சியப் போக்கு, ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. எனவே, குறுவை தொகுப்பு முழுமையாகவும், உடனடியாகவும் விவசாயிகளை சென்றடைய தேவையான நடவடிக்கைகளை, அரசு மேற்கொள்ள வேண்டும். முதல்வர் விஜய்க்கு புது அலுவலகம் கட்டுவதில் அதிகாரிகள் காட்டுற வேகத்தில், கால்வாசியையாவது குறுவை தொகுப்பு வழங்குவதில் காட்டலாமே! மா.கம்யூ., தமிழக செயலர் சண்முகம் பேச்சு: எம்.எல்.ஏ.,க்களுக்கு அரசு செலவில் கார் வழங்குவதாக த.வெ.க., அரசு அறிவித்துள்ளது. தேவையற்ற முறையில் அரசு பணத்தை செலவு செய்வது தவறு. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வழங்க விரும்பினால், கடனுதவி மூலம் வாங்கி தர வேண்டும். கடன் வாங்கி கார் வாங்குற எம்.எல்.ஏ.,க்கள், அந்த கடனை அடைக்க, 'கட்டிங்' வாங்க ஆரம்பிச்சிட்டா என்னாகும்? தி.மு.க.,வைச் சேர்ந்த, தேனி எம்.பி., தங்க.தமிழ்ச்செல்வன் பேட்டி: வனச் சட்டம் 2006ன்படி, குறிப்பிட்ட ஆண்டுகள் மக்கள் குடியிருந்தால், 'பட்டா' வழங்கி, அவர்கள் வாழ அனுமதிக்கலாம். எனவே, மேகமலை வனப்பகுதியில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வரும் மக்களை வெளியேற்ற, வனச் சட்டத்தில் இடமில்லை; அவர்களை வெளியேற்றவும் முடியாது. இது குறித்து லோக்சபாவில் பேசுவதுடன், மத்திய வனத்துறை அமைச்சரை சந்தித்தும் வலியுறுத்துவேன். மேகமலை வனப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்ட பிறகும் இப்படி பேசுறீங்களே... நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வராதா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
ஆக 24, 2026 19:42

பாராளுமன்ற அனைத்து MP களும் அறிவு ஜீவிகள் என்று நாம் நினைத்துகொண்டால் அது நம் தவறு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை