உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / தமிழ் தான் என் உயிர் மூச்சு!

தமிழ் தான் என் உயிர் மூச்சு!

மேடைகளில், பேச்சில் வெளுத்து வாங்குவது பற்றி கூறுகிறார், பேச்சாளர் முனைவர் பர்வீன் சுல்தானா: பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், இலக்கிய சொற்பொழிவாளர், இலக்கியத் திறனாய்வாளர் என, பல முகங்கள் கொண்ட நான், பேச்சாளர் என்பதில் தான் பெருமை கொள்கிறேன்.சென்னை எஸ்.ஐ.ஈ.டி., மகளிர் கல்லுாரியின் தமிழ் துறையில் இணை பேராசிரியராக பணியாற்றுகிறேன். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையிலுள்ள மீர் சாகிப் பேட்டையில் தான்.நான் படித்தது, தமிழ் வழி கல்வியில் தான். ஒன்பதாம் வகுப்பிலிருந்து பேச்சு போட்டியில் கலந்து கொள்ள துவங்கினேன். எங்கள் தெருவிலேயே முதன்முதலில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண் நான் தான்.இளங்கலை முடித்த பின், பி.எட்., படித்தேன். பின், அப்பா கொடுத்த ஊக்கத்தால், எம்.ஏ., படிக்க முடிவு செய்து, சென்னை பல்கலைக்கழகத்தில், எம்.ஏ., தமிழ் மொழித்துறையில் சேர்ந்தேன். நம் மொழியில் உள்ள பழமையான விஷயங்களை ஆழ்ந்து படிக்கும் ஆர்வம் எனக்குள் அதிகம் இருந்தது. எனவே, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், சுவடியியல் பிரிவில் பட்டயப் படிப்பை முடித்து, பின், ஓலைச் சுவடியில் உள்ள இலக்கியங்களை ஆய்வு செய்யும் தேடலில் இறங்கினேன்.ஓலைச்சுவடிகள் குறித்த என் தேடலில், ஆய்வு செய்யப்படாத, 13 போர் இலக்கியங்கள் எனக்கு கிடைத்தன. அவற்றில், பரணி இலக்கியத்துக்கு பின் வந்த போர் கதை பாடல்களை ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றது எனக்கு பெரும் மனநிறைவை தந்தது.பொதுவாக, பிரச்னையை நோக்கியதாக அல்லாமல், தீர்வை நோக்கியதாக இருக்கும் என் பயணம். எனவே, என் பெற்றோர் எனக்கு சொல்லி தந்த வாழ்வியல் முறைகள், நான் வளர்க்கப்பட்ட முறை, எனக்கு கிடைத்த தமிழாசிரியர்கள், அமைந்த சமூக சூழல், கிடைத்த வாழ்க்கை பாடங்கள் ஆகிய அனைத்தையும் எனக்கு மிகவும் பிடித்த தமிழின் வழியாக மாணவர்களிடம் பகிர்கிறேன்.என்னிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள், பிள்ளைகளின் மனதில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. தமிழ் மொழி என்பது படித்து இன்புறுவதற்கானதாக மட்டும் இல்லாமல், வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதாரத் தன்னிறைவு போன்றவற்றையும் அளிக்க வேண்டும்.சென்னை வள்ளுவர் கோட்டத்தை பார்க்கும் போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும். எந்த தெருவுக்காவது தமிழறிஞர்களின் பெயர்கள் இருந்தால் எனக்குள் அவ்வளவு மகிழ்ச்சி வரும். நல்ல தமிழ் பெயர்களை கேட்டாலோ, தமிழ் ஆளுமைகளின் சிலைகளை பார்த்தாலோ இனம்புரியாத உற்சாகம் உண்டாகும்.பல்லாயிரமாண்டு மூத்த தமிழ் மொழியின், 21-ம் நுாற்றாண்டு பயணத்தில், பர்வீன் சுல்தானாவின் பெயரும் சில தசாப்தங்களுக்கு சுவடாகப் பதிந்திருக்கும்.தொடர்புக்கு: 98400 51413


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை