உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / எனக்கு தெரிந்தது நடிப்புதான்!

எனக்கு தெரிந்தது நடிப்புதான்!

தான் நடிக்க வந்தது குறித்து கூறும் நடிகை சாந்தியம்மா: ஏழாம் வகுப்பு படிக்கும்போது, தமிழகத்தை குறித்து பாடி, அப்போதைய இந்திய ஜனாதிபதியான ராதாகிருஷ்ணனிடம் பரிசு வாங்கியதில் துவங்கியது என் கலை ஆர்வம். படங்களை பார்த்த படியே நடனம் ஆடுவேன். 'நல்லா ஆடுறியே...'ன்னு மற்றவர்கள் பாராட்டியதும், அந்த ஆர்வம் இன்னும் அதிகமானது. 'நடிகையாக வேண்டும்' என்று கூறியதற்கு, வீட்டில் சம்மதிக்கவில்லை. அதனால், 18 வயதில் வீட்டை விட்டு வெளியேறி, சென்னைக்கு வந்து விட்டேன். நடிகர் சங்கத்தில் சேரணும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அப்போது, நாடக கம்பெனியில் இருந்தால் தான், நடிகர் சங்க உறுப்பினராக முடியும் என்று கூறினர். அதற்காக, தேவி நாடக சபாவில் சேர்ந்து, கூட்டத்தில் ஒருத்தியாக நடித்து கொண்டிருந்தேன். அதன்பின், நடிகர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை வாங்கினேன். அப்படியே நாடகங்கள், படங்கள் என நடித்து கொண்டிருந்தேன். இப்போது வரும் நடிகர்கள் பலருக்கும் தமிழ் பேச தெரியவில்லை. ஆனால், அந்த காலத்தில் தமிழில் நன்கு, 'டயலாக்' பேசினால் தான் படத்தில் முன்னுரிமை கொடுப்பர்; அப்படி தான் எனக்கு பல வாய்ப்புகள் வந்தன.நிறைய நடிகையருக்கு, 'டூப்' போட்டுள்ளேன். படங்களில் நடித்து கொண்டிருந்த போதே திருமணம், குடும்பம் என, பொறுப்புகள் கூடவே, சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தேன். நீண்ட இடைவெளிக்கு பின், காக்கா முட்டை படத்தில் வாய்ப்பு வந்தது. அந்த படம் வந்து, 10 ஆண்டுகள் ஆகுது. இப்போதும், 'காக்கா முட்டை பாட்டி' என்பது தான் என் அடையாளமாக இருக்கிறது. பட வாய்ப்பு இல்லாத போது சீரியல், குறும்படங்களில் நடிப்பது, 'டப்பிங்' பேசுவது என வாழ்க்கை ஓடுகிறது. உடம்பில் எந்த நோயும் இல்லை; மனதில் எந்த வன்மமும் இல்லை. இப்போதும் வெளியூரில் படப்படிப்பு இருந்தாலும் பங்கேற்கிறேன்.உடம்பிலும், மனதிலும் தெம்பு இருக்கும் வரை நடிப்பேன். எனக்கு பிடித்தது, தெரிந்தது எல்லாம் நடிப்பு மட்டுமே. பிடித்த விஷயத்தை செய்வதாலோ என்னவோ, வயதானதை மறந்து ஓடிய படியே இருக்கிறேன்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி