தயங்கும் மாணவர்களுக்கு உதாரணமாக இருக்கணும்!
இடது கண் முற்றிலும் தெரியாது; வலது கண்ணிலும், 45 சதவீதமே பார்வைத் திறனிருந்தும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாக வந்துள்ள திருச்சி மாவட்டம், உறையூரை சேர்ந்த ஹரிஹரன்:என் பிரச்னையை நான் புரிந்துகொள்ளவே, 10 வயது ஆனது. போர்டில் எழுதிப் போடுவதை தொடர்ந்து உற்றுப் பார்த்தால், கண்களில் வலியும், கண்ணீரும் வரும். அத்துடன் கழுத்திலும், முதுகிலும் வலி வரும். அதனால், அருகில் உள்ள மாணவர்கள் எழுதுவதைப் பார்த்து எழுதுவேன்.அத்துடன், ஆசிரியர்கள் சொல்லிக்கொண்டே பாடம் நடத்துவதால், அவர்கள் சொல்லும்போதே பாடங்களை புரிந்து கொள்வேன். கேரம், செஸ் விளையாடுவேன்; இதனால், கவனம் சிதறாமல், குறிக்கோளில், 'போகஸ்' செய்யும் திறன் வளர்ந்தது. தினமும் மூன்று மணி நேரம் மட்டுமே வீட்டில் படித்தேன். ஆசிரியர்கள் மிகவும் ஊக்கப்படுத்தினர். என்னால் சாதிக்க முடியும்போது, அனைவராலும் சாதிக்க முடியும். குறைகளால் தயங்கும் மாணவர்களுக்கு நான் உதாரணமாக இருக்க விரும்புகிறேன். அடுத்து, 'ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ்' படிக்கப் போகிறேன். அந்த துறையிலும் பெரிய அளவில் சாதிப்பேன்.ஹரிஹரன் தந்தை ராஜேந்திரன்: நான் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். எனக்கு இரு மகன்கள். இரண்டாவது மகன் ஹரிஹரன் பிறந்தபோது, கருவிழிகள் மட்டும் சுற்றியபடியே இருந்தது. மருத்துவர்களிடம் காண்பித்ததற்கு, 'கண்களில் உள்ள பார்வை நரம்பு வளர்வதில் பிரச்னை இருக்கிறது. இவன் வளர்ந்தாலும், பார்வை நரம்பு வளராது' என்று கூறிவிட்டனர். பள்ளி செல்லும் வயது வந்ததும், பலரும், பார்வையற்ற மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்குமாறு கூறினர். ஆனால் நானும், என் மனைவியும் குறைபாடில்லாத மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சேர்த்தோம். வகுப்பில் முதல் பெஞ்சில் அமர்ந்தாலும், எழுத்துகள் தெரியாது. மனைவிதான் தினமும் பாடங்களை படித்துச் சொல்ல, அதை காதில் வாங்கி, மனப்பாடம் செய்ய ஆரம்பித்தான். 'பார்வைத்திறன் பாதிக்கப்பட்டாலும் கடின உழைப்புடன், லட்சியத்தில் உறுதியாக இருக்கப் போகிறேன்' என்று சொல்லி, மிகவும் கடுமையாக படிக்க ஆரம்பித்தான். 10ம் வகுப்பில் 10வது ரேங்க், பிளஸ் 1ல் வணிகவியல் பிரிவில் சேர்த்தோம். கடுமையாக உழைத்து, இந்தாண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 561 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் வந்து, எங்களை பெருமைப்பட வைத்து விட்டான். அரசு உதவினால், உயர்கல்வியில் இன்னும் பல சாதனைகளை செய்வான்.தொடர்புக்கு: 99940 11968