மேலும் செய்திகள்
சீமானுக்கு எத்தனை நாக்குகள்?
14-Oct-2025
'ஷெரின்ஸ் கிச்சன்' என்ற, 'யு டியூப் சேனல்' வாயிலாக, விதவிதமான உணவுகளை சமைத்து காட்டும், கோவையைச் சேர்ந்த ஷர்மிளா: என் சொந்த ஊர், தேனி மாவட்டம்; முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்தவள். என் சிறு வயதிலேயே பெற்றோர் இறந்து விட்டனர். நான் நன்றாக படிக்கும் மாணவி; குடும்ப வறுமையால் படிக்க முடியவில்லை. 10வதுடன் பள்ளி படிப்பை நிறுத்த வேண்டிய சூழல். என் அத்தை பையனை திருமணம் செய்து கொண்டேன். கணவர் டெம்போ வாகன ஓட்டுநராக வேலை செய்கிறார். எனக்கு தெரிந்த தம்பி ஒருவன், 'நீங்கள் நன்றாக சமையல் செய்கிறீர்கள். அதை வைத்து ஒரு யு டியூப் சேனல் ஆரம்பிக்கலாம்' என, யோசனை கொடுத்தான். அவன் தான் எப்படி பேசணும், எப்படி, 'எடிட்' செய்து, பதிவேற்றம் செய்வது போன்றவற்றை கற்றுக் கொடுத்தான். ஒரு நாளைக்கு ஐந்து சமையல் வீடியோக்கள் போடுவேன். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது, அழைத்து வருவது, சமைப்பது, வீட்டை பார்த்துக்கொள்வது என, அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, சமையல் செய்து மொபைல் போனிலேயே வீடியோ எடுத்து பதிவிடுவேன். மூன்று மாதத்தில், 42,000 ரூபாய் கிடைத்தது. அந்த பணத்தில், ஒரு கம்ப்யூட்டர் வாங்கினேன். நம்பிக்கையோடு, கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்; இதுவரை, 2,200 வீடியோக்கள் பதிவிட்டுள்ளேன். சமையல் வீடியோ போடும் ஒவ்வொருவருக்கும், ஒரு பாணி இருக்கும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையாகவும், சுவையாகவும், மணமாகவும் சமைப்பது தான் என் சிறப்பு. கடந்த, 2017ல் தொடங்கிய என் யு டியூப் சேனலுக்கு இப்போது, 30 லட்சம் பார்வையாளர்கள் இருக்கின்றனர். தற்போது, நான்கு யு டியூப் சேனல்களை நடத்துகிறேன். பிறந்தது முதல் வாடகை வீட்டில் தான் வசித்தேன்; சொந்த வீடு வாங்கும் கனவு, சமீபத்தில் நனவானது. இதற்கு, என் யு டியூப் வருமானமும், வங்கி கடனும் கைகொடுத்தன. 1.20 கோடி ரூபாய் மதிப்பில், சொந்த வீடு கட்டியுள்ளேன். ரம்ஜான் மட்டுமில்லாமல், எல்லா பண்டிகைகளையும் நாங்கள் கொண்டாடுவோம். குறிப்பாக, தீபாவளிக்கு புது ஆடை, பட்டாசு வாங்குவோம். எல்லா பெண்களுக்குமே, இயல்பிலேயே ஒரு திறமை இருக்கும். அந்த திறமையை சரியாக கவனித்து, அதில் கவனம் செலுத்தினால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம்!
14-Oct-2025