உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / முருங்கையில் 36 பொருட்கள் தயாரிக்கிறேன்!

முருங்கையில் 36 பொருட்கள் தயாரிக்கிறேன்!

முருங்கையில் ஏராளமான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும், திண்டுக்கல் மாவட்டம், நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னரசி: கடந்த 2013ம் ஆண்டில், 10 ஏக்கர் பரப்பில் இயற்கை முறையில், மூலனுார் முருங்கை பயிர் செய்தேன். இந்த பண்ணையிலேயே 10 காங்கேயம் மாடுகள், ஐந்து எருமை மாடுகள், 200 நாட்டுக் கோழிகளும் வளர்க்கிறோம். அவற்றின் கழிவுகளை உரமாக பயன்படுத்தியதால், முருங்கை நல்லா செழிப்பாக வளர்ந்து விளைச்சல் கொடுக்க ஆரம்பித்தது. ஆயினும், நாளடைவில் சில நெருக்கடிகளை சந்திக்க வேண்டி இருந்தது; உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்கவில்லை.அதனால், கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கு சென்று, முருங்கையில் மதிப்பு கூட்டல் தொடர்பான தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டேன். முதல்கட்ட முயற்சியாக, முருங்கை விதையில் இருந்து எண்ணெய் எடுத்து விற்பனை செய்ய ஆரம்பித்தேன். அதில் அதிக லாபம் கிடைத்தது. அடுத்த கட்டமாக முருங்கை இலையை காய வைத்து, பொடியாக்கி விற்பனை செய்தேன்.முருங்கை இலை பொடியை பயன்படுத்தி சாம்பார் பொடி, இட்லி பொடி, சூப் ரெடிமிக்ஸ் உள்ளிட்டவற்றையும் தயார் செய்து விற்பனை செய்தேன்.இந்த பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், முருங்கை பூ, ஹெல்த் மிக்ஸ், முருங்கைப்பூ தேன், முருங்கை பருப்பு பொடி, முருங்கை பிஸ்கட், நுாடுல்ஸ், சாக்லேட், முருங்கை விதை பால் சோப்பு, முருங்கை கூந்தல் தைலம் உட்பட மொத்தம், 36 வகையான பொருட்கள் தயாரித்து விற்பனை செய்கிறேன். ஏக்கருக்கு சராசரியாக 4 டன் முருங்கை காய்கள் கிடைக்கின்றன. 12 கிலோ பசும் இலையை சோலார் டிரையரில் உலர்த்தினால், 1 கிலோ காய்ந்த இலைகள் கிடைக்கும்; அதை தேவைக்கேற்ப பொடியாக்கி, அதில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்கிறோம்.நாட்டு மருந்து கடைகள், இயற்கை அங்காடிகள், பாரம்பரிய மருத்துவமனைகள், சூப்பர் மார்க்கெட்களுக்கும் என் பொருட்களை வினியோகம் செய்கிறேன். சமூக ஊடகங்கள் வாயிலாக நேரடியாகவும் அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்துஉள்ளனர்; வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக ஆர்டர்கள் வருகின்றன.என்னிடம் நான்கு ஊழியர்கள் நிரந்தரமாக வேலை பார்க்கின்றனர். நிறைய ஆர்டர்கள் வரும்போது, 10க்கும் மேற்பட்ட ஊழியர்களை, அந்த சமயத்திற்கு பணி அமர்த்திக் கொள்வேன். இத்தொழிலில், மாதத்திற்கு சராசரியாக, 2 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. எல்லா செலவுகளும் போக, 1 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. தொடர்புக்கு96776 13853


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை