உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / பயிற்சியுடன் மெட்டீரியலும் சேர்த்து கொடுக்கிறேன்!

பயிற்சியுடன் மெட்டீரியலும் சேர்த்து கொடுக்கிறேன்!

பிளவுஸ்களில், 'ஆரி ஒர்க்' செய்து அசத்தலாக சம்பாதிக்கும், திருவாரூர் மாவட்டம், எடக்கீழையூரைச் சேர்ந்த நவீனா: பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து, 2016ல் ஐ.டி., வேலையில் சேர்ந்தேன். கை நிறைய சம்பளம் கிடைத்தாலும், வேலையில் மனநிறைவு இல்லை. சுயதொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. 2018ல் என் அக்காவுக்கு திருமணம் நடந்தபோது அவருக்கும், எனக்கும், 'ஆரி ஒர்க்' செய்த பிளவுசை ஆர்டர் செய்திருந்தோம்.எங்கள் ஊரில் அது குறித்து யாருக்கும் தெரியாததால், சென்னையில் தான் ஆர்டர் செய்து வாங்கினோம். ஆரி ஒர்க் குறித்து கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆசையில், 2019ல், 'யு டியூப்'பில் தேடி பார்த்து தான் கற்றுக்கொண்டேன். 2020ல் கொரோனா ஊரடங்கு சமயத்தில், வீட்டில் இருந்தே வேலை செய்ய நேர்ந்தது. அப்போது தான் ஆரி ஒர்க்கை முழுமையாக கற்றுக்கொண்டேன்.எவருடைய ஆலோசனையும், வழிகாட்டுதலும் இல்லாமல் நானே சொந்தமாக செய்தேன். என் வேலையை விடாமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து பார்த்தேன். மன்னார்குடியில் உள்ள டெய்லர் ஷாப்களை அணுகினேன்; சிலர் ஆர்டர் கொடுத்தனர். ஆரி ஒர்க்கில் செய்த பிளவுஸ்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டேன்; தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலம், வெளிநாடு என பல இடங்களில் இருந்தும் ஆர்டர்கள் குவிந்தன. நாட்கள் செல்ல செல்ல, 'ஆரி ஒர்க் வகுப்பு எடுக்க முடியுமா?' என்று பலரும் கேட்கத் துவங்கினர். ஆகவே, மன்னார்குடியில் வாடகைக்கு இடம் பார்த்து, பயிற்சி வகுப்புகள் எடுக்கத் துவங்கினேன். பயிற்சி வகுப்புகளில் நான் சொல்லிக் கொடுத்ததை சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். இதை பார்த்த பலரும், 'ஆன்லைனில் வகுப்பு எடுக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தனர். அதனால், ஆன்லைனில் வகுப்பு எடுக்கத் துவங்கினேன். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் கற்று தருவதால், அனைவரும் சுலபமாக கற்றுக்கொள்கின்றனர். ஐ.டி., வேலையை விட்டுவிட்டு, முழு நேரமாக இதில் இறங்கி விட்டேன்.இரண்டு மாத பயிற்சி வகுப்புக்கு, 5,000 ரூபாய் வரை வசூலிக்கிறேன். வெறும் பயிற்சி மட்டுமல்லாமல், மெட்டீரியலும் சேர்த்துக் கொடுக்கிறேன். இதுவரை, 4,000 பேர் பயிற்சி பெற்றிருக்கின்றனர்.என்னிடம் பயிற்சி பெறுபவர்களுக்கு ஐ.எஸ்.ஓ., பதிவு பெற்ற சான்றிதழ் வழங்குகிறேன். அதனால், பயிற்சி முடித்ததும் அவர்கள் சுயமாக தொழில் துவங்க முடியும். அப்படி என்னிடம் பயிற்சி பெற்றவர்களில், 1,000க்கும் மேற்பட்டோர் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்து வருகின்றனர். ஆரி ஒர்க் பிளவுசில் 1,000 முதல் 25,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.தொடர்புக்கு87788 13822


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !