நாலும் பொண்ணா பிறந்துடுச்சேன்னு வருத்தமில்லை!
சென்னை, பெரம்பூரில் இஸ்திரிக் கடை வைத்திருக்கும் படவேட்டையம்மாள்: என் உலகம் ரொம்ப சின்னது. ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் மூணுவேளை சாப்பாட்டுக்கு கஷ்டம் இல்லாம சாமி படி அளந்தது. 35 வருஷமா இஸ்திரி போடுறேன். எங்க அப்பா இந்த தெருவுலதான் இஸ்திரி வண்டி போட்டு இருந்தாரு.குடும்பச் சூழலில், 13 வயதிலேயே கல்யாணம் கட்டிக் கொடுத்துட்டாங்க. வீட்டுக்காரருக்கும் இஸ்திரிதான் தொழில். இந்த ஏரியா ஜனங்க எல்லாம் அத்துப்படி. ரெகுலர் கஸ்டமர்கள்கிட்ட காசு குறைச்சுதான் வாங்குவேன்.எனக்கு, 20 வயசுக்குள்ள நாலு பெண் பிள்ளைங்க. என் மகள்களை படிக்க வச்சு, நல்ல இடத்துல கட்டிக் கொடுத்து ஊர் வாய மூடணும்னு வைராக்கியம்.காலையில், 8:00 மணிக்கு வந்தா இரவு 7:00 மணி வரைக்கும் துணி இஸ்திரி போடுவோம். ஒரு நாளைக்கு 800 ரூபாய் வரை கிடைக்கும். என் மகள்களும் சூழலை புரிந்து, இருக்கிறத சாப்பிட்டு, கிடைச்சதை உடுத்தி வளர்ந்துச்சுங்க. மூணு பொண்ணுங்க பிளஸ் 2 வரைக்கும் படிச்சாங்க; ஒரு பொண்ணு மட்டும் டபுள் டிகிரி படிச்சிட்டு வேலைக்குப் போகுது.'பெண் பிள்ளைகளை படிக்க வைக்காதே... லவ்வு, கிவ்வுன்னு வந்து நிக்கும்'னு பலரும் சொன்னாங்க. ஆனா, நாலு பேரும் நான் சொன்ன மாப்பிள்ளைகளை தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. நாலையும் நல்ல படியா வளர்க்கணும்னு ஆசைப்பட்டேனே தவிர, நல்ல சாப்பாட்டுக்குக் கூட நான் ஆசைப்பட்டதில்லை. 13 வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டு, உலகமே இந்த வண்டி தான்னு வாழ்ந்துட்டேன். என் பொண்ணுங்களாவது நல்ல வாழ்க்கை வாழணும்னு குடிக்காத மாப்பிள்ளை கிடைக்கணும்னு நினைச்சேன். படாத பாடுபட்டு, நாலு பொண்ணுங்களையும் கரை சேர்த்திருக்கேன். இப்ப பேரன், பேத்தின்னு வீடு நிறைஞ்சிருக்கு. இந்த வருமானத்துல, சென்னையில எங்க தகுதிக்கு ஏத்த மாதிரி சொந்தமா ஒரு வசந்த மாளிகை கட்டி இருக்கோம். எங்க அம்மாவுக்கு 90 வயசு; அவங்களை நான்தான் பார்த்துக்கிறேன். மனசார சொல்றேன்... நாலும் பொண்ணா போச்சுன்னு ஒருநாள்கூட நான் வருத்தப்பட்டது இல்லை. அதுங்க தான் என்னோட செல்வம்.இப்பகூட, 'நீ வேலை செஞ்சது போதும்; நாங்க பார்த்துக்கிறோம், நீ ரெஸ்ட் எடு'ன்னு சொல்லுதுங்க. ஆனா, நான்தான் மாப்பிள்ளைகள் தயவுல வாழக்கூடாதுன்னு இன்னும் இஸ்திரி போடுறேன். வீட்டுக்காரருக்கு இப்ப முடியாம போச்சு; என் உழைப்புலதான் குடும்பம் ஓடுது.பொண்ணுங்க தான் குடும்பத்தோட அச்சாரம்னு பெருமையா சொல்லுவேன். நான் நாலு பொண்ணுங்களுக்கு அம்மா மட்டுமல்ல; பாசத்துல நான் பெரும் பணக்காரி!