உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / 1,050 கிலோ மகசூலில் ரூ.1.05 லட்சம் வருமானம்!

1,050 கிலோ மகசூலில் ரூ.1.05 லட்சம் வருமானம்!

அதலைக்காய் சாகுபடியில் அசத்தும், விருதுநகர் மாவட்டம், பாம்பாட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆனந்த் குமார்: விவசாயம் தான் எங்க குடும்பத்தோட வாழ்வாதாரம். இந்த பகுதி முழுக்கவே மானாவாரி நிலம் தான். இங்குள்ள விவசாயிகள் பருத்தி, துவரை, உளுந்து, பச்சை பயறு, மொச்சை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வது வழக்கம். அப்பா கடுமையான உழைப்பாளி; அவர் தான் விவசாயத்தை கவனித்து கொண்டு இருந்தார்.நான் பள்ளி படிப்பை முடித்த பின், டிப்ளமா மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சிட்டு, சிங்கப்பூர்ல நாலு ஆண்டுகள் வேலை பார்த்தேன். வேலை பளு அதிகமா இருந்ததால, வேலையை விட்டுட்டு சொந்த ஊருக்கு திரும்ப வந்துட்டேன். 'நம்மகிட்ட நிலம் இருக்கு; ஒழுங்கா விவசாயத்தை பார்ப்போம்'னு அப்பா சொன்னார். இந்த மானாவாரி பகுதியில் சுலபமாக விளையக்கூடிய அதலைக்காய் சாகுபடி செய்ய முடிவெடுத்தேன். இதில், பல மருத்துவக் குணங்கள் நிறைந்திருப்பதாக பாரம்பரிய மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் இருபுறமும் உள்ள காம்புகளை கிள்ளிவிட்டு, பொரியல், புளிக்குழம்புக்கு பயன்படுத்துவர். குழந்தைகளின் வயிற்றில் ஏற்படக்கூடிய குடற்புழுக்களை நீக்கம் செய்யவும் இது மிகச் சிறந்த மருந்தாகும்.எங்கள் பருத்தி தோட்டத்தில் ஊடுபயிராக அதலைக்காய் சாகுபடி செய்தேன். அதலைக்காய் விதைப்பு செஞ்ச, 60வது நாளில் இருந்து மகசூல் கொடுக்கும். காலையில 7:00 மணிக்கு துவங்கி 9:00 மணிக்குள் பறிச்சு முடிச்சிடுவேன்; 10:00 மணிக்குள்ள காய்கள் சந்தைக்கு போயிடும்.மற்ற காய்கறிகளை போல் அதலைக்காயை எடுத்து வைத்து விற்க முடியாது. ஆறு மணி நேரத்துக்கு மேல தாண்டினால், அதலைக்காய் வெடிச்சு தோல் தனியா, விதை தனியாக பிரிஞ்சிடும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை காய்கள் பறிக்கிறது வழக்கம். இந்த அடிப்படையில கணக்கு பார்த்தால், 35 -- 40 முறை வரை பறிக்கலாம். கடந்தாண்டு, 1,050 கிலோ மகசூல் கிடைத்தது.விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி வியாபாரிகளிடம், 1 கிலோ 100 ரூபாய் வீதம் விற்பனை செய்ததன் வாயிலாக, 1.05 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. அதேபோல, பருத்தி விதைப்பு செய்த 120ம் நாளில் இருந்து பறிப்புக்கு வந்தது. நான்கு நாட்களுக்கு ஒரு முறை வீதம், மொத்தம் 40 பறிப்புகள் வரை பறித்தோம். 10 குவின்டால் மகசூல் கிடைத்தது. ஒரு குவின்டாலுக்கு குறைந்தபட்சம் 5,000 முதல் அதிகபட்சம் 6,000 ரூபாய் வரை விலை கிடைத்தது. 10 குவின்டால் விற்பனை வாயிலாக, 55,000 ரூபாய் வருமானம் கிடைத்தது. அதலைக்காய்க்கும், பருத்திக்கும் ஒரே பராமரிப்பு தான். இந்த இரண்டு பயிர்கள் மூலமாகவும், எல்லா செலவுகளும் போக, ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. தொடர்புக்கு 80563 13674


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை