உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / ஏற்றுமதி செய்து பயனடைய நிறைய வாய்ப்பு!

ஏற்றுமதி செய்து பயனடைய நிறைய வாய்ப்பு!

கடந்த 24 ஆண்டுகளாக, பாரம்பரிய மலர்களை ஏற்றுமதி செய்து வரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த 'ஸ்ரீவேன்கார்டு எக்ஸ்போர்ட்' நிறுவனர் உமாசங்கரி: கேரளாவில் உள்ள பாலக்காடு தான் பூர்வீகம்; 1997ல் திருமணமாகி, கணவரின் ஊரான திண்டுக்கல் வந்தேன். கோவையில் அப்போதெல்லாம் மலர் வியாபாரம் சிறப்பாக நடந்து கொண்டு இருந்தது.எனவே, அந்த ஊரில் குடியேறி மலர் ஏற்றுமதிக்கான அனுபவங்களை கற்றுக் கொண்டோம். பின், 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் மலர் ஏற்றுமதியை சிறு அளவில் ஆரம்பித்தோம்.ஆரம்பத்தில் 30 கிலோ மல்லிகைப் பூவை சரமாகக் கட்டி மூங்கில் கூடையில் அடுக்கி, துபாய்க்கு அனுப்பினோம். சவால்களை தாண்டி, ஏற்றுமதிக்கான அனுபவங்களை ஓரளவுக்கு தெரிந்து கொள்ளவே இரண்டு ஆண்டுகள் ஆகின.பிரெஷ்ஷான பூக்களை உரிய நேரத்திலும், கட்டுப்படியான விலையிலும் அனுப்புவதும் தான் முக்கியம். இதை சரியாகச் செய்தோம்.அதனால், துபாய்க்கு மல்லிகை தவிர பலவித மலர்களை அனுப்புவதற்கான ஆர்டர்கள் கிடைத்தன.சிங்கப்பூர், மலேஷியாவுக்கு பூக்களை அனுப்பினோம். 2010 முதல் அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்து வருகிறோம்.வெளிநாட்டுக்கு போன பின் தான் பூக்கள் மொட்டு அவிழ்ந்து மலரும். அதற்கேற்ற மாதிரி, சூரிய உதயத்திற்கு முன் பறிக்கப்பட்ட மொட்டுகளை மட்டும் தான் வாங்குவோம்.மல்லிகையின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. எனவே, மல்லிகை மொட்டுகளை மட்டும் சாதாரண தண்ணீரில் நனைப்போம்.அதன்பின், ஐஸ் கட்டிகள் சேர்த்து குளிர்விக்கப்பட்ட தண்ணீரில் ஒரு முறை போட்டு எடுப்போம். இதனால், மொட்டுகள் சீக்கிரம் விரியாது. வெளிநாடுகளில், மாலைகளை கட்டிக் கொடுக்க பணியாளர்கள் தட்டுப்பாடு இருக்கிறது. எனவே திருமணம், கோவில் விழாக்களுக்கு நிறைய ஆர்டர்கள் வரும். மல்லிகைப்பூவை மீட்டர் கணக்கில் சரமாகக் கட்டி அனுப்புவோம்.மல்லிகை, செவ்வந்தி, செண்டுமல்லி, அரளி, சம்பங்கி, தாமரை, பட்டன் ரோஸ் உள்ளிட்ட மலர்களுடன், துளசியை உதிரியாகவும், மாலையாக தொடுத்தும் ஏற்றுமதி செய்கிறோம்.அமெரிக்காவுக்கு மட்டும் வாரந்தோறும் 24 டன் வரை அனுப்புகிறோம். ஆண்டுக்கு 80 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்கிறோம். 'பேக்கேஜிங்' மற்றும் டெலிவரி விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். மலர்களை கொள்முதல் செய்வது, மார்க்கெட்டிங் ஏரியாக்களை கணவர் பார்த்து கொள்கிறார். விவசாயம் செழிப்பாக நடக்கிற இந்தியாவில் இருந்து, விளைபொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பயனடைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ