குழந்தைகளுக்கான கடை, பியூட்டி சலுான், டிசைனிங் ஸ்டூடியோ என்று மூன்று தொழில்களிலும் வெற்றி நடை போடும், கரூரைச் சேர்ந்த சரண்யா சக்திவேல்:சொந்த ஊர், கோவை மாவட்டம், சூலுார். அப்பா சின்ன தாக ஜவுளிக்கடை வைத்திருந்ததால், பள்ளியில் படித்தபோதே எனக்கு பேஷன் டிசைனிங் மீது ஆர்வம் ஏற்பட்டது. அப்பாவின் நண்பர் தான் என் ஆர்வத்தையும், திறமையையும் கண்டு, அப்பாவிடம் பேசி கோர்சில் சேர உதவினார். பின் எனக்கும், கரூரைச் சேர்ந்த சக்திவேலுவுக்கும் திருமணம் முடிந்தது.கரூரில், குழந்தைகளுக்கான பொருட்களை விற்கும் பிரத்யேக கடை ஆரம்பிக்க விரும்பி கணவரிடம் கூறிய போது, உற்சாகப்படுத்தி முதலீட்டுக்கு பணமும் கொடுத்தார். தோழியை பார்ட்னராக சேர்த்து, 'பேபி கிட்ஸ் ஷாப்'ஐ 2014ல் துவங்கினோம்.பிறந்த குழந்தை முதல் 3 வயது குழந்தை வரைக்கும் தேவையான ஆடைகள், உணவு மற்றும் பயன்பாட்டு பொருட்கள், அம்மாக்களுக்கான பொருட்கள் என மும்பை, கோல்கட்டா சென்று வாங்கி வந்து விற்றோம். கரூரில் இதுபோன்ற கடை முதல் முறை என்பதால், போட்டியை சந்திக்காமலே வெற்றி பெற்றோம். அடுத்து, 'ஆன்லைன்' வாயிலாக சூரத், பீஹாரில் புடவைகள் வாங்கி விற்பனை செய்ய துவங்கினேன். அதுவும் நன்றாக, 'பிக்கப்' ஆனது. வீட்டிலேயே, 'சாரா பியூட்டி கேர்ஸ்' சலுானை துவங்கி, 'ஸ்கின் அண்டு ஹேர் ட்ரீட்மென்ட் சர்வீஸ்' செய்ய துவங்கினேன்.நான்கு குழந்தைகளின் அம்மாவான நான், குழந்தைகளை பார்த்தபடியே தொழிலையும் பார்த்துக் கொள்வது கஷ்டம் தான்.அதில், என் வேகம் கொஞ்சம் தடைபட்டிருக்கலாமே தவிர, அடுத்தடுத்த முயற்சிகளை தொடர்ந்து கொண்டே தான் இருந்தேன். அப்படித் தான், 2020ல் கோவை சாலையில், 'சி3 பியூட்டி சலுான், சாரா விசைனர்' என்ற டிசைனிங் ஸ்டூடியோவையும் துவங்கினேன்.'ஏன் இப்படி எல்லாத்தையும் இழுத்துப் போட்டு...?' என்று என்னை கேட்காத ஆள் இல்லை. ஆனால், என்னை உற்சாகமாக வைத்திருப்பதே இந்த பரபர வேலைகள் தான். தொழில் சார்ந்து இடைவிடாமல் சிந்தித்தபடியே இருப்பது தான், எனக்கு ஆக்சிஜன் என்று தோன்றும்.என் அனுபவத்தில் சொல்கிறேன்... எந்த தொழிலுக்கும் அடிப்படை, தரமும், வாடிக்கையாளர்களை நடத்தும் விதமும் தான் முக்கியம்.புதிதாக தொழில் துவங்க நினைப்போர் சவால்களையும், தடைகளையும், அவமானங்களையும் மன உறுதியுடன் கடந்து, கடுமையான உழைப்பை அளித்தால், வெற்றி வந்தே தீரும்.'தவறு எங்கே நிகழ்ந்தது?' என்று ஆழமாக யோசித்தால் தீர்வு கிடைத்துவிடும். மார்க்கெட்டில் அப்டேட்டாக இருக்க வேண்டியதும் அவசியம். இதற்கெல்லாம் தயார் என்றால், யார் வேண்டுமானாலும் தொழில் முனைவோர் ஆகலாம்!