உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / மரச்சிற்பங்களை இந்தியா முழுக்க விற்பனை செய்து வருகிறோம்!

மரச்சிற்பங்களை இந்தியா முழுக்க விற்பனை செய்து வருகிறோம்!

மரச் சிற்பக் கலையில் மூன்றாவது தலைமுறையாக தொழில் செய்து வரும், சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டி கிராமத்தை சேர்ந்த செங்கோட்டுவேல்:தம்மம்பட்டியில் தேர் வேலை செய்வதற்கு, மூன்று தலைமுறைக்கு முன்னால் வந்த தாத்தாவின் காலம் தொட்டு மரச்சிற்பங்கள் செய்து வருகிறோம். விநாயகர், லட்சுமி, சரஸ்வதி போன்ற சாமிகளும் குதிரை, சிம்மம், மயில் போன்ற வாகனங்களும், கோவிலுக்கு தேவையான நிலைகள், கதவுகள் தேர் என, அனைத்து வகையான மரப்பொருட்களையும் பாரம்பரியமாக செய்து வருகிறோம்.நாங்கள் பயன்படுத்துவது வாகை மரம் தான். இது தவிர்த்து விநாயகர், கிருஷ்ணர், லட்சுமி ஆகிய தெய்வ சிற்பங்கள் மற்றும் வீட்டின் நிலைகள் செய்ய தேக்கு மரத்தையும், கோவிலுக்கு தேவையான வாகனங்கள் செய்ய அத்தி மரத்தையும், தேர் செய்ய இலுப்பை மரத்தையும் தேர்வு செய்து வருகிறோம்.இங்கு, 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலை செய்கின்றன. அந்தக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் ஒரு பிரிவில் தேர்ந்தவர்களாக இருப்பர். பெண்கள், 'சாண்ட்' பேப்பர் போடுவது, பெயின்ட் அடிப்பது போன்ற வேலைப்பாடுகளை செய்வர். வெளிமாநிலங்களில் இருந்தும் லண்டன், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் மரச்சிற்பங்களை வாங்க மக்கள் பெருவாரியாக வருகின்றனர். சிங்கப்பூர், மலேஷிய வாழ் தமிழர்களுக்கு நம் மரபுப் பொருட்களை பயன்படுத்துவதில் எப்போதுமே பெரும் ஆர்வமுண்டு.சிற்பக் கலையில் இந்திய அரசின் விருதையும், தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றிருக்கிறேன். அப்பாவுக்கு, 'வாழ்நாள் பொக்கிஷம்' என்ற விருதை தமிழக அரசு அளித்துள்ளது; இது மரச்சிற்பக் கலைக்கு கிடைத்த பெருமை. ஆரம்பத்தில் இத்தொழிலில் சரியான வருவாய் இல்லை. பின், பொருட்காட்சிகளில் எங்கள் தயாரிப்புகளை பொதுமக்கள் பார்வைக்கு வைத்ததில், எங்கள் பொருட்களின் விற்பனை அதிகரித்தது. மேலும், சக தொழிலாளர்களின் பொருட்களையும் வாங்கி மெருகேற்றி, இந்தியா முழுக்க விற்பனை செய்து வருகிறோம். தற்போது, வர்த்தகமானது ஆன்லைன் தளம் வாயிலாக நடக்கிறது. தற்போதுள்ள, 'டிஜிட்டல் டெக்னாலஜி' வழியே மத்திய அரசின் அனுமதியுடனும், மத்திய அரசு வரிவிலக்கு அளித்ததன் வாயிலாக, வெற்றிகரமாக தொழிலை நடத்துகிறோம். 2020ல் தம்மம்பட்டி மரச்சிற்பம் தமிழகத்தின் 36வது புவிசார் குறியீட்டைப் பெற்றிருப்பது இந்த வர்த்தகத்துக்குக் கிடைத்த மரியாதை.இந்த பாரம்பரியமிக்க மரச்சிற்பத் தொழில் வாயிலாக, ஆண்டுக்கு, 60 லட்சம் ரூபாய்க்கு மேலாக வருவாய் ஈட்டுகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை