வாழ்ந்து காட்டணும் என்ற பிடிவாதம் நிறையவே உள்ளது!
அரியவகை எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, கடினமாக படித்து, பெங்களூரு, லிங்கராஜபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக இருக்கும், 35 வயதான ரம்யா: கர்நாடக மாநிலம், பெங்களூரு தான் சொந்த ஊர். எனக்கு பிறவியிலேயே ஏற்படும் மரபணு குறைபாடு நோய் உள்ளது. இது தாக்கினால், எலும்புகள் எளிதில் உடைந்து விடும். எலும்பு சிதைவுகளும் ஏற்படலாம், எலும்புகள் மிகவும் மென்மையாகி, பலவீனமாகும். காது கேளாமை மற்றும் கண்களின் வெள்ளை பகுதி நீலநிறமாக மாறலாம். இந்த நோயை முற்றிலும் குணமாக்க முடியாது. ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலும். நோயாளிக்கு அசாத்திய மனத்துணிச்சலும், 'வாழ்ந்து காட்ட வேண்டும்' என்ற பிடிவாதமும் இருந்தாக வேண்டும். எனக்கு அது நிறையவே இருக்கிறது. சக்கர நாற்காலி உதவியுடன் தான் என்னால் இயங்க முடியும் என்பதால், என்னை சேர்த்துக் கொள்ளவே பல பள்ளிகளும் மறுத்தன. வீட்டின் பொருளாதார நிலையும் மந்தமாக இருந்தது. இதனால், அரசு பள்ளிக்கு தினமும் ஆட்டோவில் சென்று படித்தேன். பள்ளி படிப்பு முடிந்து, அருகிலிருந்த கல்லுாரிகளில் மேல் படிப்புக்கு விண்ணப்பித்து, நிராகரிக்கப்பட்டேன். கோலார் மாவட்டம், முல்பாகல் பகுதியில் இருந்த அரசு கல்லுாரியில் சீட் கிடைக்கவே, எனக்காகவே குடும்பத்தினரும் அங்கு குடியேறினர். அங்கு தீவிரமாக படித்து பட்டம் பெற்றேன். பெங்களூரு பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழியில், அரசியல் அறிவியல் பாடத்தில் முதுகலை பட்டம் வாங்கினேன். முல்பாகல் பகுதியில் இயங்கி வரும் சாரதா கல்லுாரியில், பி.எட்., ஆசிரியர் பயிற்சி வகுப்பில், 2017ல் சேர்ந்து அதையும் வெற்றிகரமாக முடித்தேன். தற்போது, லிங்கராஜபுரத்தில் உள்ள, 'அசோசியேஷன் ஆப் பீப்பிள் வித் டிஸ்ெஸபிலிட்டி' என்ற அமைப்பு நடத்தி வரும் பள்ளியில், நான்கு முதல் ஏழாம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கன்னட மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியையாக இருக்கிறேன். மின்சாரம் வாயிலாக இயங்கும் சக்கர நாற்காலி பயன்படுத்துகிறேன். ஆசிரியை பணியை ஆத்மார்த்தமாக நேசிக்கிறேன். மாற்றுத்திறனாளி மாணவர்களின் மனநிலையை, என்னைவிட வேறு யாரால் நன்றாக புரிந்து கொள்ள முடியும்! மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவ - மாணவியருக்கும், அவர்களின் பெற்றோருக்கும் ஏற்படுத்தி வருகிறேன். பொது இடங்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்பதை தீவிரமாக வலியுறுத்தி வருகிறேன்.