நுகர்வோருக்கும் பயன் தரக்கூடிய தக்காளி தாள்!
தக்காளியில் பல பொருட்கள் மதிப்பு கூட்டி விற்கப்படுகின்றன. அதில் புதிய முயற்சியாக, 'தக்காளி தாள்' தயாரித்துள்ள, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை துறையில் துணை பேராசிரியராக பணியாற்றி வரும், திருச்சி, கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த சங்கீதா: தக்காளியின் விலை உச்சத்தில் இருக்கும்போது, 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. விலை குறையும் போது, 5 ரூபாய் என்று அதலபாதாளத்திற்கு சென்று விடுகிறது. இதனால், போட்ட முதலீட்டை எடுக்க முடியாமல், விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதுதான் தக்காளி தாள் தயாரிப்பதற்கு துாண்டுகோலாக இருந்தது.விலை ஏற்ற இறக்கம் இல்லாமல், தக்காளியை நுகர்வோருக்கு வழங்குவதற்காக, மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம், 'தக்காளி கிராண்ட் சேலஞ்ச்' என்ற போட்டியை நடத்தியது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிறுவனங்கள் என பல தரப்பட்டோர் பங்கேற்றனர். மொத்தம், 2,000 ஐடியாக்கள் வந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று ஐடியாக்களில் என்னுடையதும் ஒன்று. இந்தியாவிலேயே முதன் முறையாக தக்காளியை காகிதத்தாள் மாதிரி தயார் செய்யும் ஐடியாவை வழங்கி இருந்தேன். இதை தயாரிப்பது எளிது. தக்காளியை கழுவி சுத்தம் செய்து, அதன் தோல் நீக்கி, மென்மையாக அரைத்து கூழாக்கி கொள்ள வேண்டும். அதன்பின் வடிகட்டி, விதைகளை நீக்கி, கூழை சீராக பரப்பி உலர்த்தினால், தக்காளி தாள் தயார்.அதன்பின் தேவைப் படும் அளவுகளில் துண்டுகளாக்கி, காற்று புகாமல், 'பேக்' செய்து விட வேண்டும். அறை வெப்பநிலையில் மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.இந்த தக்காளி தாள்களை கைகளால் காகிதம் கிழிப்பது போல் கிழித்து, வெதுவெதுப்பான வெந்நீரில் போட்டு மூன்று நிமிடங்கள் விட வேண்டும். அதன்பின் மிக்சியில் போட்டு அரைத்து, எதற்கெல்லாம் தக்காளியை பயன்படுத்துகிறோமோ, அதற்கெல்லாம் பயன்படுத்தலாம். தக்காளி விலை குறைவாக இருக்கும் சமயங்களில், இது போன்று தாள்களாக தயார் செய்து வைத்துக் கொண்டால், விலை அதிகமாக இருக்கும் சமயங்களில் விற்பனை செய்து கொள்ளலாம்.இந்த தயாரிப்பை, தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்தும் ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதித்து சான்று அளித்துள்ளது; இத்துடன் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சான்றிதழும் பெறப்பட்டுள்ளது.இதன் சுவை, சத்துக்கள் உள்ளிட்டவற்றின் சாதக பாதகங்களை ஆராய்ந்ததில், நேர்மறையான முடிவுகளே கிடைத்திருக்கின்றன. விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நுகர்வோருக்கும் பயன் தரக்கூடிய தயாரிப்பு இது!தொடர்புக்கு94434 43624