கொய்யா இலையில் பற்பொடி, டீத்துாள் தயாரித்து விற்கிறோம்!
கொய்யா சாகுபடியில் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் லாபம் பார்க்கும் திருவள்ளூர் மாவட்டம், தண்ணீர்குளம் ஊராட்சியைச் சேர்ந்த செந்தில்குமார்:சொந்த ஊர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மேலமடை கிராமம். திருமணத்திற்கு பின் தொழில் நிமித்தமாக, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் வசிக்க ஆரம்பித்தோம். மனிதர்கள் நோய் நொடி இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ, ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவது எந்தளவுக்கு அவசியம் என்பது குறித்து, சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை யதார்த்தமாக படித்தேன்.இது சம்பந்தமாக தனியார் நிறுவனமொன்று நடத்திய மூன்று மாத பயிற்சியில் பங்கேற்றபோது தான், இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து தெரிந்தது. நண்பர் வாயிலாக, 10 ஏக்கர் நிலம் குத்தகைக்கு கிடைத்தது. 2020 முதல் இங்கு கொய்யா சாகுபடி செய்கிறோம். 'லக்னோ - 49, அர்கா கிரண், தைவான் பிங்க்' ஆகிய ரகங்களை பயிர் செய்துள்ளோம். 12,000 கொய்யா மரங்கள் இருக்கின்றன.வரிசைக்கு வரிசை 6 அடி, மரத்துக்கு மரம் 6 அடி வீதம் இடைவெளியில் சற்று நெருக்கமாக விட்டுள்ளோம். கன்று நட்ட மூன்றாவது மாதத்தில் பூக்க ஆரம்பித்தது.தொடர்ந்து 12வது மாதம் முதல் மகசூல் கிடைத்தது. மூன்றாவது ஆண்டில், ஒரு மரத்திற்கு 6 கிலோ பழங்கள் கிடைத்தன. அந்த ஆண்டு அதிக மகசூல் கிடைத்ததால், விற்பனை செய்ய முடியாமல், 30 டன் பழங்கள் தேங்கி விட்டன. அதனால், எங்கள் பகுதியில் உள்ள வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் வழிகாட்டுதல்படி மதிப்பு கூட்டலில் ஈடுபட முடிவெடுத்தோம். தஞ்சாவூரில் உள்ள மத்திய அரசின் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம் வாயிலாக பயிற்சி எடுத்து, எந்த ஒரு ரசாயன பொருட்களும் இன்றி, கொய்யா பழத்தில் ஜாம், ஜூஸ், கொய்யா இலையில் பற்பொடி, டீத்துாள் உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்து, நாங்களே கடை அமைத்து விற்பனை செய்து வருகிறோம்.மற்ற இயற்கை அங்காடிகளுக்கும் வினியோகம் செய்கிறோம். விதை திருவிழா, உணவு திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஸ்டால் அமைத்தும் விற்பனை செய்கிறோம். சமூக ஊடகங்கள் வாயிலாகவும் நிறைய ஆர்டர்கள் வருகின்றன. அந்த வகையில், 1 கிலோவுக்கு சராசரியாக 30 ரூபாய் வீதம் விலை கிடைக்கிறது. கடந்தாண்டு, 10 ஏக்கரில் கிடைத்த 60,000 கிலோ கொய்யா பழங்கள் விற்பனை வாயிலாக, 18 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. களையெடுப்பு, இடுபொருள் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் போக, 12 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது.தொடர்புக்கு: 73730 95548.