சென்னை வெயிலையும் ஸ்ட்ரீட் புட்களையும் மறக்க மாட்டோம்!
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தைச் சேர்ந்த மெர்சி, அசி, குக்கு, லுலு ஆகிய நான்கு சகோதரிகள் கிடார் போன்ற கருவியை வைத்தபடி, வசீகர குரலில் பாடுகின்றனர். இசை உலகில், 'டெட்ஸியோ சிஸ்டர்ஸ்' என அழைக்கப்படும் இவர்களில் மூத்தவரான மெர்சி:எங்கள் இசைப்பயணம் அசாத்தியமானது. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த, பழங்குடி மக்களின் பிரதிநிதிகளாக இருப்பதை பெருமிதமாக உணர்கிறோம். வடகிழக்கு மாநில மக்களின் உண்மையான குணம், மண்ணையும், மக்களையும் நேசிக்கும் பண்பு, அதை உலகத்துக்கு உரக்க சொல்வதை கடமையாக நினைக்கிறோம்.உலகின், முதல் சகோதரிகள் இசைக்குழு என்ற சாதனையை படைத்திருக்கிறோம். எங்களை பாட வைத்ததோடு, நால்வரையும் ஒரே மாதிரி நடத்தி, இன்று இசைத்துறையில் முக்கியமான ஆட்களாக வளர்த்துவிட்ட பெற்றோரை நினைத்து பார்க்கிறோம். நாங்கள், 'சக்கேசாங்' என்ற நாகா உட்பிரிவைச் சேர்ந்த பழங்குடி இனத்தவர்கள். நாங்கள் பாடும் மொழி, 'சோக்ரி' என்று அழைக்கப்படுகிறது. நாகாலாந்தின் இளம் கலாசார துாதுவர்களாகவும் இருக்கிறோம்; அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறோம். தண்ணீரை அடுத்த தலைமுறைக்காக சேமிக்க வலியுறுத்தி, 'பானி லிசோ' என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டோம்.அந்த பாடல்கள், எங்கள் ஊர்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலை பிரார்த்தனை நேரத்தில் பாடப்படுகின்றன.நான் சைக்காலஜி படித்துள்ளேன். திருமணத்துக்குப் பின் நாவல்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆங்கில நாவலாசிரியராக, சர்வதேச அளவில் பெயரெடுக்க வேண்டும் என்பதே என் கனவு.என் தங்கை அசி, அழகி போட்டிகளில் பதக்கங்கள் வாங்கியவள். குழந்தைகள் பிறந்ததால், மாடலிங் துறையில் இருக்கிறாள். சினிமா இயக்குநராக வேண்டும் என்பது அவள் கனவு.தங்கை குக்கு, சோஷியல் மீடியா இன்புளுயன்ஸர். கடைசி சகோதரி லுலு, நாக்பூரில் மருத்துவம் படிக்கிறாள். அவளுக்கு மிகப்பெரிய அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பது கனவு.தனித்தனி வீடுகளில், தனித்தனி கனவுகளோடு வாழ்ந்தாலும், எங்கள் நால்வரையும் இணைத்து வைத்திருப்பது இசைதான்.மாசெவ் டெட்ஸியோ என்ற உடன்பிறந்த சகோதரர் இருக்கிறார். எங்கள் இசைப் பயணங்களை ஒருங்கிணைப்பது, சம்பளம் உள்ளிட்டவற்றை கவனிக்கிறார். சென்னையில் பலமுறை இசை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறோம். கலாசாரத்திலும், ரசனையிலும் தமிழ் மக்கள் தேர்ந்தவர்கள்; உபசரிப்பிலும் அசத்தி விடுகின்றனர்.மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் இரண்டுமே எங்களுடைய, 'பேவரைட் ஸ்பாட்!' சென்னை வெயிலையும், 'ஸ்ட்ரீட் புட்'களையும் வாழ்நாளுக்கும் மறக்க மாட்டோம்.******************'பிரைவசி'யை ரொம்பவே 'மிஸ்' பண்றேன்!
பிரபல நடிகை நித்யா மேனன்: ஒரு படத்தில், 'கமிட்' ஆகும்போது, அந்த படத்துக்கு நான் என்ன பண்ண முடியும்னு தான் யோசிப்பேன்.அந்தப் படத்துக்கு விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் வைத்துக் கொள்ள மாட்டேன். அதுதான் என் பர்சனாலிட்டியும் கூட.எனக்கு இந்த மொழி உசத்தி, அந்த மொழி உசத்தி என்பதெல்லாம் இல்லை. எல்லா மொழி படங்களையும் ஒரே மாதிரி தான் பார்ப்பேன். சொல்ற கதை ரியலா இருக்கணும்... சரியான ஆட்களோட ஒர்க் பண்ணணும்... இவ்வளவுதான் என் கண்டிஷன்ஸ்.நடிப்புத் திறமையை நிரூபிக்கிறதும் என் நோக்கமில்லை. நான் ஒரு படம் பண்றேன்னா, அதுல என் கேரக்டர் மக்கள்கிட்ட சின்னதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தணும், ஒரு பாசிட்டிவிட்டியை உருவாக்கணும்னு யோசிப்பேன். எல்லாருடைய வாழ்க்கையிலும் கஷ்டங்கள், பிரச்னைகள் இருக்கு.அந்த நிலையில், லைட்டான, பாசிட்டிவான படங்களில், கேரக்டரில் நடிக்கும்போது அதை பார்ப்பவர்களுக்கு சின்னதா ஒரு மனமாற்றம் ஏற்படும். அப்படிப்பட்ட லைட்டான, கேரக்டர்கள் தான் என் சாய்ஸ்.என் பெயருக்குப் பின் உள்ள மேனன் என்ற வார்த்தையை எங்கள் குடும்பத்துல யாருமே உபயோகிப்பதில்லை. ஜாதி அடையாளத்தை வெளிப்படுத்துவதில் எங்கள் குடும்பத்தில் யாருக்கும் உடன்பாடில்லை. நித்யா மேனன்னு யார் என்னை கூப்பிட்டாலும், அது என் பெயரில்லை, 'ஸ்பெல்லிங் மிஸ்டேக்'னு என்று தான் தோன்றும். ஆரம்பத்தில் இருந்தே நான் இதை, 'கரெக்ட்' பண்ணிட்டே இருக்கேன்; ஆனால், மக்கள் மனதில் அது மேனன்னே பதிந்து விட்டது; அதை மாற்ற முடியவில்லை. அதனாலதான் நித்யா மேனன் என்ற என் பெயரை, ஜாதி அடையாளமா தெரியக்கூடாது என்பதற்காகவே, 'நித்யா மெனென்'னு மாத்தினேன்.எங்களோடது, 'நைன் டூ பைவ் ஜாப்' இல்லை. தினமும் காலையில கிளம்பி, ரெடியாகி ஒரே மாதிரி பார்க்குற வேலையில்லை. நடிப்பு என்பது ரொம்ப கஷ்டமான வேலைதான். ராத்திரி, பகல் பார்க்காம, சாப்பிடாம, துாங்காம ஒர்க் பண்ணணும்கிறதுல சந்தேகமில்லை.ஆனாலும், பிரேக் எடுக்கணும்னு நினைச்சா, எங்களால பிளான் பண்ணிக்க முடியும். அதை ரொம்ப பாசிட்டிவான விஷயமா பார்க்கிறேன்.பிடிக்காத விஷயம்னா, 'பிரைவசி' இல்லாதது. எனக்கு, 'அட்டென்ஷன்' அவ்வளவா பிடிக்காது. எந்த தொந்தரவும் இல்லாம, 'வாக்' போக பிடிக்கும். ஆனா, நடிகையாய் இருப்பதால் அது சாத்தியமில்லை. பிரைவசியை மிஸ் பண்ணும்போதுதான், அதன் அருமை தெரியும். நான் அதை ரொம்பவே, 'மிஸ்' பண்றேன்.