உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / டாக்டர் நியமனத்தில் ரூ.10 கோடி பார்த்த உதவியாளர்!

டாக்டர் நியமனத்தில் ரூ.10 கோடி பார்த்த உதவியாளர்!

''ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, நிறுத்தி வைக்க சொல்லிட்டாங்க பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.''யாரு, எதை நிறுத்த சொல்லியிருக்காவ வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''சென்னை கொரட்டூர்ல, ஒரு நம்பர் லாட்டரி விற்பனை மற்றும் சூதாட்டம் நடக்கிறதா, 'தினமலர்' நாளிதழ்ல சமீபத்துல செய்தி வெளியானதே... உடனே, அம்பத்துார் போலீஸ் ஏ.சி., ஆபீஸ்ல இது சம்பந்தமா விசாரணை நடந்துச்சு பா...''இதுல, அம்பத்துார் மார்க்கெட், தொழிற்பேட்டை, புதுார் மார்க்கெட், பிள்ளையார் கோவில் பின்புறம்னு அஞ்சாறு இடங்கள்ல ஒரு நம்பர் லாட்டரி மற்றும் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை நடக்கிறது உண்மைதான்னு தெரியவந்துச்சு... ''இதை விற்பனை செய்த சிலர், ஏ.சி., ஆபீஸ் அதிகாரிகளிடம், 'பேச்சு' நடத்தியிருக்காங்க... இதனால, அவங்க மேல நடவடிக்கை எதுவும் எடுக்காம, ஓட்டு எண்ணிக்கை முடியும் வரைக்கும் லாட்டரி விற்பனையை நிறுத்தி வைக்கும்படி உத்தரவு போட்டிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''மஞ்சு விரட்டையும் வர்த்தகமா மாத்திட்டாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''தமிழர்களின் வீர விளையாட்டான மஞ்சு விரட்டு, வடமாடு போட்டிகள் சிவகங்கை மாவட்டத்தில், அதிகமா நடக்கு... பெரும்பாலும், கோவில் திருவிழாக்களை முன்னிட்டு, மஞ்சு விரட்டு போட்டிகளை நடத்துவாவ வே...''ஆனா, விழா குழுவுக்கு வருவாய் துறையினர் லேசுல அனுமதி தர மாட்டேங்காவ... அதே நேரம், காளைகள் வளர்க்குறவங்க, விளம்பரதாரர்களிடம் பல லட்சம் ரூபாய் வரை வசூல் செஞ்சு, வருவாய் துறை அதிகாரிகளை, 'கவனிச்சு' அனுமதி வாங்கி, வணிக நோக்குல நடத்துற மஞ்சு விரட்டுக்கு மட்டும் அனுமதி தர்றாவ... இதனால, கோவில் விழா குழுவினர் விரக்தியில இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''உதவியாளரே கோடிகள்ல புரண்டா, முக்கிய புள்ளி எப்படி இருப்பார் ஓய்...'' என கேட்டு நிறுத்தினார், குப்பண்ணா.''என்ன, ஏதுன்னு விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''கால்நடை துறையில், தமிழகம் முழுக்க காலியா இருந்த, 700 உதவி மருத்துவர் பணியிடங்களை, மூணு மாசத்துக்கு முன்னாடி டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தி, நியமனம் பண்ணால்லியோ... ''பணியிடங்களை தேர்வு செய்ய கவுன்சிலிங் நடத்தாததால, துறை முக்கிய புள்ளியின் உதவியாளர் ஒருத்தர் புகுந்து விளையாடிண்டார் ஓய்...''தேர்வான டாக்டர் ஒவ்வொருத்தரிடமும், 8 முதல் 15 லட்சம் ரூபாய் வரை கட்டாயமா வசூல் பண்ணிண்டு, பணி நியமன ஆர்டரை குடுத்திருக்கார்... குறிப்பா, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள்ல கடும் போட்டி இருந்ததால, 20 லட்சம் ரூபாய் வரை வசூல் பண்ணியிருக்கார் ஓய்...''இது தவிர, ஏற்கனவே பணியாற்றும் உதவி மருத்துவர்கள் பணியிட மாறுதலுக்கும்,2 முதல் 5 லட்சம் ரூபாய் வரை வாங்கியிருக்கார்... இப்படி வசூல் பண்ணதுல 75 சதவீதம் முக்கிய புள்ளிக்கும், 25 சதவீதத்தை அவருமா பிரிச்சுண்டா ஓய்...''இந்த பணி நியமனத்துல மட்டும் உதவியாளர், 10 கோடி ரூபாய் பார்த்துட்டாராம்... அப்படின்னா, முக்கிய புள்ளிக்கு எவ்வளவு தேறியிருக்கும்னு கணக்கு போட்டுக்கோங்க...'' என முடித்தார், குப்பண்ணா.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
ஜூன் 02, 2024 00:09

மூன்றாம் ஆண்டை கடந்து வெற்றி நடை போடும் இந்த அரசை மக்கள் எல்லோரும் புகழ்ந்து பாராட்டுகின்றனர் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமை கொள்கிறார்..


R.RAMACHANDRAN
ஜூன் 01, 2024 07:35

ரேஷன் கடைக்கு ஆட்கள் நியமனம் செய்ய 5 லட்சம் வாங்கினார்கள்.6000 ரூபாய் சம்பளத்திற்கு 5 லட்சம் லஞ்சம் .கால்நடை உதவி மருத்துவர்கள் ஊதியம் பல மடங்குக்கு குறைத்து லஞ்சம்.


R.RAMACHANDRAN
ஜூன் 01, 2024 07:30

இந்த நாட்டில் குற்றவாளிகள் பங்கு கொடுப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். அப்படியே எடுத்தாலும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க மாட்டார்கள்.அப்படி தப்பவிட்டால்தான் தொடர்ந்து சட்டவிரோத வருமானம் ஈட்ட முடியும்.


D.Ambujavalli
ஜூன் 01, 2024 06:35

ரொம்ப சுலபம் இவரது ‘கலெக்ஷனை’ மூன்றால் பேருக்க வேண்டியதுதானே


மேலும் செய்திகள்