உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சுகாதார அதிகாரியை மிரட்டும் அரசு டாக்டர்கள்!

சுகாதார அதிகாரியை மிரட்டும் அரசு டாக்டர்கள்!

பில்டர் காபிக்கு ஆர்டர் தந்தபடியே, ''எந்த விழாவுக்கும் அவரை கூப்பிடப்டாதுன்னு முடிவு பண்ணிட்டா ஓய்...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.''யார் மேல யாருக்கு வே இவ்வளவு வெறுப்பு...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்தவர், நாமக்கல் முன்னாள் எம்.பி., சின்ராஜ்... தி.மு.க., கூட்டணியில், போன முறை ஜெயித்து எம்.பி.,யா இருந்தவர், ஆளுங்கட்சிக்கு எதிரா அடிக்கடி, 'ஸ்டன்ட்' அடிச்சுண்டு இருப்பார் ஓய்...''அரசு அலுவலகங்கள்ல அடிக்கடி ஆய்வு நடத்தி, அதிகாரிகளை மிரட்டறது, கலெக்டர் ஆபீஸ், போலீஸ் ஸ்டேஷன்ல தர்ணா நடத்தறதுன்னு, 'லைம் லைட்'லயே இருப்பார்... இவராலயே, நடந்து முடிஞ்ச லோக்சபா தேர்தல்ல, நாமக்கல்ல தி.மு.க., கூட்டணி ஜெயிச்சுட்டாலும், ப.வேலுார், காவிரி கரையோர பகுதிகள்ல ஓட்டுகள் குறைஞ்சுடுத்து...''இதனால, அடுத்து எந்த விழாவுக்கும் கூட்டணி கட்சியின் மாஜி எம்.பி.,ங்கற முறையில, சின்ராஜை அழைக்க கூடாதுன்னு தி.மு.க., நிர்வாகிகள் முடிவு பண்ணியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''திட்டமிட்டு மறைச்சிடுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''எதை, யாருங்க மறைக்கிறது...'' என கேட்டார், அந்தோணிசாமி.''விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் அடங்கிய, 'வாட்ஸாப் குரூப்' ஒண்ணு இருக்கு... இதுல, மாவட்டத்துல பதியப்பட்ட வழக்குகள், கைது நடவடிக்கை, நீதிமன்ற தீர்ப்புகளை வெளியிடுவாங்க பா...''ஆனா, சிவகாசி பெண் போலீசுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு, மூதாட்டி கொலையில் எஸ்.எஸ்.ஐ., மகன் கைது ஆகிய செய்திகளை குரூப்ல பதிவிடலை... அரசு அலுவலர்கள், குறிப்பா, போலீசாருக்கு எதிரான நடவடிக்கைகள், பத்திரிகையாளர்களுக்கு தெரியக் கூடாதுன்னு மாவட்ட போலீசார் திட்டமிட்டு மறைச்சிடுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''கண்டிப்பான அதிகாரிக்கு எச்சரிக்கை குடுத்திருக்காவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''கோவை மாவட்டத்தில், சுகாதார துறை இணை இயக்குனரா இருக்கிறவர் ராஜசேகர்... அடிக்கடி அரசு மருத்துவமனைகளில் ஆய்வுக்கு போறவர், பணியில் இல்லாத டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காரு வே...''பணி நேரத்துல தங்களது சொந்த கிளினிக் போயிடுற டாக்டர்கள் மேலயும் நடவடிக்கை எடுத்தாரு... அதே மாதிரி, தனியார் மருத்துவ மனைகள்ல நடக்குற தவறுகளையும் தட்டி கேட்காரு வே...''இவரது அதிரடி நடவடிக்கையால, மாவட்டத்துல பல அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டிருக்கு... குறிப்பா, வால்பாறை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பகுதிகள்ல, பல கோடி ரூபாய் அரசு நிதியில மேம்பாட்டு பணிகள் நடந்திருக்கு வே...''ஆனா, இப்படி வேலையை ஒழுங்கா பார்க்கிற அதிகாரியை, அரசு டாக்டர்களுக்கு பிடிக்குமா... இவரை மாத்தியே ஆகணும்னு எல்லாரும் சேர்ந்து, இவருக்கு எதிரா தொடர் புகார் குடுத்துட்டு இருக்காவ வே...''இன்னும் சில டாக்டர்கள் ஒருபடி மேல போய், 'நாங்க சொல்றதை தான் கேட்கணும்... இல்லன்னா எங்க பவரை பயன்படுத்தி, உங்களை டிரான்ஸ்பர் பண்ணிடுவோம்'னு நேரடியாவே ராஜசேகரை மிரட்டியிருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜூன் 23, 2024 14:09

ஸ்டாலின் மேடை தற்புகழ்ச்சி பேச்சுக்களை குறைத்துக்கொண்டு டீக்கடையில் பேசப்பபடும் புகார்களை விசாரித்தால் திமுக இமெஜ் உயரும்.. செய்வாரா..??


நிக்கோல்தாம்சன்
ஜூன் 23, 2024 06:17

அந்த டாக்டர்கள் யாரு என்று ஸ்டாலின் உணர்ந்து கொண்டு அவர்களை காவேரி போன்ற படுகைகளை அனுப்பி வேலை செய்ய வைக்கலாம்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை