உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அடுத்த வசூல் வேட்டை ஆரம்பம்!

அடுத்த வசூல் வேட்டை ஆரம்பம்!

''தி.மு.க.,வுல, 'சிட்டிசன் அமெண்ட்மென்ட் ஆக்ட்' தொடர்பா, தவறான தகவல் பரவிட்டு இருக்கு வே...'' என, பெஞ்ச் விவாதத்தைத் துவக்கினார் பெரியசாமி அண்ணாச்சி.''மொத முறையா, சரியான உச்சரிப்போட இங்கிலிஷ் பேசி இருக்கீங்க... விவரம் சொல்லுங்க... யார் அது தவறான தகவல் பரப்புறது...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''சென்னை அக்கார்டு ஓட்டல்ல, கட்சி பேச்சாளர் கூட்டம் சமீபத்துல நடந்துச்சு... திருச்சி சிவா தலைமை... உதயநிதி வரப் போறதா சொல்லி, கூட்டத்தை தக்க வச்சிட்டிருந்தாரு... அவர் வரப் போறதில்லைன்னு எடுத்துச் சொன்னவங்க எல்லாரையும் ஒருமையில திட்டி அனுப்பிச்சிட்டாரு... அது வேற கதை வே...''சி.ஏ.ஏ.,வுக்கு வாரேன்... ராஜ்யசபாவுல, இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிரா, 105 பேர் வாக்களிச்சிருக்காவ... ஆதரவா 125 பேர் வாக்கு குடுத்தாவ... அ.தி.மு.க.,வுல 10 பேரு... அன்புமணி ஒருத்தரு... இவங்கல்லாம் ஓட்டு போட்டு தான், சி.ஏ.ஏ., ஜெயிச்சிருச்சு... ஆனா, திருச்சி சிவா, '99 தான் நமக்கு ஆதரவா விழுந்துச்சு'ன்னு தவறான கணக்கை சொல்லி இருக்காரு... அது இப்ப, தி.மு.க.,வுல சலசலப்பை உண்டாக்கி இருக்கு வே...'' என்றார் அண்ணாச்சி.''எம்.பி., நடத்திய நாடகத்தை கேளுங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''நாமக்கல் மாவட்டம், ப.வேலுார்ல பல வருஷமா காவிரியாற்றில் மணல் திருட்டு நடக்குது... கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் எம்.பி.,யான சின்ராஜ், போன வாரம் ப.வேலுார் போலீஸ் நிலையத்துல தரையில அமர்ந்து தர்ணா நடத்தினாரே பா...''அப்ப, 'மணல் திருடுற அனிச்சம்பாளையம் ராஜா, நன்செய் இடையாறு சேகர் இருவரையும் கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன்'னு சொன்னாரு... போலீசார், 'மூணு நாள்ல, குற்றவாளிகளை கைது செய்வோம்'னு சமாதானப்படுத்தி அனுப்பி வச்சாங்க பா...''ஆனா, ராஜாவை மட்டும் தான் கைது செஞ்சாங்க... அப்புறமா நாலு நாள் கழிச்சு, ப.வேலுார் அரசு மருத்துவமனையில் நடந்த அரசு விழாவில் எம்.பி., சின்ராஜ் கலந்துக்கிட்டாரு... அதே விழாவுல, நன்செய் இடையாறு சேகரும் கலந்துக்கிட்டாரு பா...''அங்க, ரெண்டு பேரும் சகஜமா சிரிச்சு பேசிக்கிட்டாங்க... இதை பார்த்த மக்கள், 'நம்ம எம்.பி., சின்ராஜ், அருமையான நடிகருப்பா'ன்னு புலம்பிட்டே போனாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''அடுத்த வசூல் வேட்டையை ஆரம்பிச்சுட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''எந்த கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''இது, பள்ளிக்கல்வி துறை விவகாரம்... சமீபத்துல தான், 'பெற்றோரை கொண்டாடுவோம்' என்ற பெயரில், மதுரையில் பிரமாண்ட மண்டல மாநாடு நடத்தி, பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை கோடிக்கணக்கில் வீணடித்து, கச்சிதமா, 'பில்'கள் வச்சு கணக்கு காட்டினா ஓய்...''அடுத்து, துறை அமைச்சரிடம் நல்ல பெயர் வாங்க நினைக்கற சில அதிகாரிகளும், மாநில பி.டி.ஏ., நிர்வாகிகளும், 'பி.டி.ஏ., ஆண்டு மலரை பிரமாண்டமா தயாரிக்கிறோம்'னு கிளம்பிட்டா...''இதுக்காக, மாவட்ட வாரியா தனியார் பள்ளிகளிடம் வசூல் வேட்டை நடத்த, கல்வி அதிகாரிகளுக்கு, 'டார்கெட்' நிர்ணயம் பண்ணியிருக்கா... சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரிய மாவட்டங்களுக்கு ஒரு தொகையும், சிறிய மாவட்டங்களுக்கு ஒரு தொகையும் நிர்ணயிச்சு இருக்கா ஓய்...''இப்பதான் மாநாட்டுக்கு வசூல் பண்ணா... அடுத்தும் வசூலுக்கு வந்து நின்னா எப்படின்னு தனியார் பள்ளி நிர்வாகிகள் புலம்பறா... இது சம்பந்தமா, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பவும் சிலர் முடிவு பண்ணியிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை