வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சிங்கப்பெருமாள் கோயில் மின்நிலையம் மட்டும்இல்லை.. மறைமலைநகர் இதைவிட மோசம். கேட்க ஆள் இல்லை.. ஊழல் இன்றி அணுவும் அசையாது..
மேலும் செய்திகள்
தி.மு.க. - அ.தி.மு.க.வில் யாருக்கு 'சீட்?'
17-Feb-2026
இ ஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''வசூல்ல புகுந்து விளையாடுறாங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி. ''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய். ''செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் மின்வாரிய அலுவலக கட்டுப்பாட்டில், 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கு... அரசியல் பிரமுகர் ஒருத்தர், சமீபத்தில், தன் குடோனுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிச்சிருந்தாருங்க... ''அவரை மூணு ஒயர்மேன்கள் தொடர்பு கொண்டு, ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டிருக்காங்க... அரசியல் பிரமுகர், மின்வாரிய பெண் அதிகாரியிடம் புகார் பண்ணியிருக் காருங்க... ''புதுசா வந்திருக்கிற அந்த பெண் அதிகாரி, மூணு ஒயர்மேன்களையும் கூப்பிட்டு, 'எனக்கு தெரியாம யார்கிட்டயும் பணம் வாங்க கூடாது... நீங்க வாங்குறதுல எனக்கும் பங்கு வந்துடணும்... நான் அமாவாசையில் பிறந்தவள்... நீங்க என்ன தப்பு செஞ்சாலும், கண்டுபிடிச்சிடுவேன்'னு எச்சரிக்கை குடுத்திருக்காங்க... ''இதனால, ஒயர்மேன்கள் தரப்பு உற்சாகமாகிடுச்சு... புது மின் இணைப்புக்கு, 5,000 ரூபாய் கறாரா லஞ்சம் வாங்குறாங்க... அதேபோல, மீட்டர் மாற்றி அமைக்கிறது, மின் கம்பங்களை மாத்துறதுன்னு எதுவா இருந்தாலும், 'கட்டிங்' வெட்டுனா தான் காரியம் நடக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''ஜெயராணி மேடம்... சாயந்தரமா பேசறேன்....'' என, மொபைல் போன் இணைப்பை துண்டித்தபடியே வந்த குப்பண்ணா, ''வி.ஐ.பி.,க்கள் எல்லாம், விருதுநகர் மாவட்டத்தை குறி வைக்கறா ஓய்...'' என்றார். ''எந்த கட்சியில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''எல்லா கட்சியிலும் தான்... தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், சாத்துார்ல போட்டியிட விரும்பறார்... ராஜபாளையம் தொகுதிக்கு, அ.தி.மு.க.,வில் நடிகை கவுதமி விருப்ப மனு குடுத்துட்டு, 'வெயிட்' பண்றாங்க ஓய்... ''கடந்த 2024 லோக்சபா தேர்தல்ல, விருதுநகர்ல, 4,379 ஓட்டுகள் வித்தியாசத்துல தோற்று போன தே.மு.தி.க.,வின், விஜயபிரபாகரன் இந்த முறை, அருப்புக்கோட்டை சட்டசபை தொகுதியில் போட்டியிட ஆர்வமா இருக்கார்... லோக்சபா தேர்தல்ல, இந்த தொகுதியில் தனக்கு அதிகம் ஓட்டுகள் விழுந்ததால, சுலபமா ஜெயிச்சிடலாம்னு நினைக்கறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''அதிகாரியை பார்க்கவே முடியல பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்... ''கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்ல இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் பணிக்காக, 50 பேரை தற்காலிகமா நியமிச்சு, அந்த பணிகளையும், தாலுகா அலுவலக புனரமைப்பு பணிகளையும், அதிகாரிகள் அனுமதியுடன், வி.ஏ.ஓ., ஒருத்தர் செஞ்சிருக்காரு... இதுக்கு மொத்தம், 29 லட்சம் ரூபாய் செலவாகியிருக்கு பா... ''வட்டிக்கு பணம் வாங்கி, இந்த பணிகளை வி.ஏ.ஓ., செஞ்சாராம்... இந்த பணத்தை தாலுகா அதிகாரி ரொம்பவே இழுத்தடிச்சு, தவணை முறையில குடுத்திருக்கார்... இன்னும், 2.65 லட்சம் ரூபாய் பாக்கி இருக்குது பா... ''அந்த அதிகாரியை நேர்ல பார்க்க முடியாதாம்... ஏன்னா, தனக்கு அரசு தந்திருக்கும் பங்களாவுக்குள்ள அதிகாரி இருந்துக்கிட்டு, தன் உதவியாளரை வெளியில பூட்டிட்டு போயிட சொல்றாரு பா... ''அதிகாரி, வீட்டுக்குள்ள அப்படி என்னதான் பண்றார்னு தெரியல... 'போன் அடிச்சாலும் எடுக்கிறது இல்ல'ன்னு எல்லாரும் புலம்புறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய். ''குணசிவா வழியை விடுங்க...'' என்றபடியே அந்தோணிசாமி நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.
சிங்கப்பெருமாள் கோயில் மின்நிலையம் மட்டும்இல்லை.. மறைமலைநகர் இதைவிட மோசம். கேட்க ஆள் இல்லை.. ஊழல் இன்றி அணுவும் அசையாது..
17-Feb-2026