''மதுபானம் தண்ணியா ஓடறது ஓய்...'' என்ற படியே, நண்பர்கள் நடுவில் அமர்ந்தார் குப்பண்ணா. ''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''சென்னை, ஓட்டேரி மற்றும் தலைமை செயலக குடியிருப்பு பகுதியில, 24 மணி நேரமும் மது விற்பனை கனஜோரா நடக்கறது... ராத்திரி, 10:00 மணிக்கு, 'டாஸ்மாக்' கடைகளை மூடியதும், 'பார்'கள்ல சரக்குகளை பதுக்கி வச்சு, நடுராத்திரி வரைக்கும் விக்கறா ஓய்... ''அதேபோல கார்த்தால, 6:00 மணிக்கே விற்பனையை துவங்கிடறா... குவார்ட்டர் பாட்டிலுக்கு, 50 முதல், 100 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விக்கறா ஓய்... ''இதை கண்டுக்காம இருக்க யார் யாரை கவனிக்கணுமோ, அவாளை எல்லாம், 'சிறப்பா' கவனிச்சுடறா... இந்த மது விற்பனையால, ஓட்டேரி சுற்று வட்டார பகுதிகள்ல அடிதடி மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகமா நடக்கறது ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''நேர்காணலுக்கு வந்தவங்க தெறிச்சி ஓடிட்டாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... ''ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, போதை கலாசாரத்துக்கு எதிரான சமத்துவ நடைபயணத்தை, வர்ற ஜனவரி 2ல் திருச்சியில் துவங்கி, 12ம் தேதி மதுரையில் முடிக்க இருக்காருங்க... இதுல, அவருடன் நடக்க இருக்கும் கட்சியின் தொண்டரணி, மாணவரணி உறுப்பினர்களுக்கு மதுரையில, சமீபத்தில், வைகோவே நேர்காணல் நடத்தினாருங்க... ''அப்ப ஒருத்தரிடம், 'நீ என்ன படிச்சிருக்கே'ன்னு கேட்க, அவரும், 'பி.ஏ., ஆங்கில இலக்கியம்'னு பதில் சொன்னார்... உடனே, 'ஷேக்ஸ்பியர் எழுதிய பிரபல நாடகம் எது'ன்னு வைகோ கேட்க, அந்த நபர், 'திருதிரு'ன்னு முழிச்சிருக்கார்... உடனே, 'நீ எப்படி ஆங்கில இலக்கியம் படிச்சே'ன்னு கேட்க, அவர் ஓடாத குறையா கிளம்பிட்டாருங்க... ''இந்த மாதிரி, வைகோ கேட்ட கேள்விகளால சில இளைஞர்கள், 'தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமோ'ன்னு நொந்தபடியே திரும்பிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''ஆளுங்கட்சி தரப்புல சொத்து பட்டியல் எடுக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''யாருடைய சொத்து பட்டியலை எடுக்காவ வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''காவிரி டெல்டா மாவட்டங்களில், தேர்தல்ல, தி.மு.க., கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்த, அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் ஒருத்தர், 'பிளான்' பண்ணிட்டு இருக்கார்... அங்க இருக்கும் விவசாயிகள் பிரச்னை, அவங்களது நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை எல்லாம் கையில் எடுத்துட்டு இருக்காரு பா... ''ஆளுங்கட்சி தரப்பு சும்மா இருக்குமா... அந்த மாஜி, அ.தி.மு.க., ஆட்சியில் வாங்கி குவிச்ச சொத்துக்கள் பட்டியலை எடுத்துட்டு இருக்காங்க... குறிப்பா, 2016ல இருந்து, 2021ம் வருஷம் வரைக்கும், அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்கள்ல வாங்கிய அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் பட்டியலை சேகரிக்கிறாங்க பா... ''இதை வச்சு, 'ஒரு காலத்துல சசிகலா ஆதரவாளரா இருந்த மாஜி அமைச்சர், சசிகலா தம்பி திவாகரனை சந்திக்க நல்ல சட்டை இல்லாம, வாடகைக்கு சட்டை வாங்கி போட்டுட்டு போனார்... ஆனா, 'அமைச்சரானதும் பல கோடிகளுக்கு அதிபதியானது எப்படி'ன்னு கேட்க, டெல்டா தி.மு.க.,வினர் திட்டமிட்டிருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய். ''அது சரி... காமராஜர் மாதிரி அப்பழுக்கற்ற தலைவர்கள் எல்லாம் இருந்த தமிழகம் எப்படி ஆயிட்டு பாருங்க வே...'' என, அலுத்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.