உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  தொகுதியை மாற்றிய குழு மீது காங்கிரசார் அதிருப்தி!

 தொகுதியை மாற்றிய குழு மீது காங்கிரசார் அதிருப்தி!

மெ து வடையை கடித்தபடியே, ''சத்தம் காட்டாம அமுக்கிட்டாங்க பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய். ''என்னத்த வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பக்கம் இடைக்காட்டூர்ல, அரசு மேல்நிலைப் பள்ளி இருக்கு... இங்க படிக்கிற ஒன்பதாம் வகுப்பு மாணவருக்கு சமீபத்துல பிறந்த நாள் வந்துச்சு பா... ''அன்னைக்கு பள்ளி விடுமுறையா இருந்தாலும், பள்ளிக்கே நண்பர்களை வரவழைச்சி, மது விருந்தோட பிறந்த நாளை கொண்டாடியிருக்காரு அந்த மாணவர்... போதை தலைக்கேறிய மாணவர்கள், பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் பைப்புகளை அடிச்சி நொறுக்கியதும் இல்லாம, அந்த வழியா போன சில பெண்களையும் கேலி செஞ்சிருக்காங்க பா... ''மறுநாள், விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியான ஆசிரியர்கள், அந்த மாணவர்களையும், அவங்க பெற்றோரையும் கூப்பிட்டு கண்டிச்சிருக்காங்க... பெற்றோரும், 'இந்த முறை மன்னிச்சி விட்டிருங்க... சேதமான பைப்புகளை நாங்களே சரி பண்ணி குடுத்துடுறோம்'னு கேட்டதால விட்டுட்டாங்க... பள்ளி மாணவர்களுக்கு மதுபானம் விற்கக்கூடாதுன்னு சட்டம் இருந்தும், அதை யாரும் கண்டுக்கிறது இல்ல பா...'' என்றார், அன்வர்பாய். ''கறாரா, 'கட்டிங்' கேக்காரு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி. ''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''சேலம் மாவட்டம், சங்ககிரியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இருக்கு... 'டிரைவிங் லைசென்ஸ்' வாங்கவும், வாகனங்களை பதிவு செய்யவும், இங்கே தினமும் நுாற்றுக்கணக்கானவங்க வந்துட்டு போறாவ வே... ''இங்க இருக்கிற அதிகாரிக்கு குறைந்தபட்சம், 2,000 ரூபாயை வெட்டுனா தான், எந்த காரியமும் நடக்கும்... அப்படி, யாராவது தராம இருந்தா, அவங்க ஆவணங்களை எல்லாம் பக்காவா வச்சிருந்தாலும், 'பைக் ஓட்டி எட்டு போடுறப்ப, காலை தரையில வச்சிட்டீங்க... அதனால, லைசென்ஸ் தர முடியாது'ன்னு அதிகாரி மறுத்துடுதாரு வே... ''இவரை பத்தி, இந்த அலுவலக உயர் அதிகாரிகளுக்கு தெரிஞ்சாலும், யாரும் கண்டுக்க மாட்டேங்காவ... 'இவரை இங்கே இருந்து மாத்தினா தான் இந்த அலுவலகம் உருப்படும்'னு, நேர்மையான ஊழியர்கள் பலரும் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி. ''செந்தில்குமார், இதையும் கேட்டுட்டு கிளம்பும்...'' என, நண்பரை இழுத்து பிடித்த குப்பண்ணாவே, ''தொகுதியை மாத்தக் கூடாதுன்னு போர்க்கொடி துாக்கியிருக்கா ஓய்...'' என்றபடியே தொடர்ந்தார்... ''தி.மு.க., கூட்டணியில், காங்., போட்டியிட விரும்பும், 39 தொகுதிகள் பட்டியலை, காங்., மேலிடம் நியமித்த ஐவர் குழு, முதல்வர் ஸ்டாலினை பார்த்து குடுத்திருக்கு ஓய்... ''அந்த பட்டியல்ல, இப்ப காங்., வசம் இருக்கற தென்காசிக்கு பதிலா, பக்கத்துல இருக்கற கடையநல்லுார் தொகுதியை கேட்டிருக்க... ''தென்காசியின் தற்போதைய காங்., - எம்.எல்.ஏ.,வா பழனி நாடார் இருக்கார்... 'இந்த தொகுதியில், நாடார் சமுதாயத்தினர் ஓட்டுகள் அதிகமா இருக்கறதால, இங்க காங்., சுலபமா ஜெயிக்க வாய்ப்பிருக்கு... ஆனாலும், பழனி நாடாருக்கு மறுபடியும், 'சீட்' கிடைக்காம தடுக்கவே, கடையநல்லுார் தொகுதியை கேட்டிருக்கா'ன்னு, தென்காசி காங்கிரசார் எல்லாம் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா. பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை