உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மேயர் பதவிக்கு , அட்வான்ஸ் வழங்கிய கவுன்சிலர்கள்!

மேயர் பதவிக்கு , அட்வான்ஸ் வழங்கிய கவுன்சிலர்கள்!

''ப தவி உயர்வு இல்லாம பரிதவிக்கறா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா. ''எந்த துறையில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''தமிழகத்தின், 38 மாவட்டங்கள்லயும் மைய, கிளை நுாலகங்கள், ஊர்ப்புற மற்றும் பகுதி நேர நுாலகங்கள் இருக்கு... போன வருஷம், 446 ஊர்ப்புற நுாலகர்களுக்கு, மூன்றாம் நிலை நுாலகர்களா பதவி உயர்வு குடுத்தா ஓய்... ''அதே சமயம், ஏற்கனவே மூன்றாம் நிலை நுாலகரா இருக்கறவா, பதவி உயர்வுக்காக பல வருஷமா காத்திருக்கா... இப்ப, 100க்கும் மேற்பட்ட இரண்டாம் நிலை நுாலகர் பணியிடங்கள் காலியா கிடக்கு ஓய்... ''அந்த இடங்களை பதவி உயர்வு மூலமா நிரப்பணும்னு கேக்கறா... 'நுாலக துறையில், இப்படி பல நிலைகள்லயும் பதவி உயர்வை இழுத்தடிக்கறதால, முதல் நிலை நுாலகர்கள், ஆய்வாளர்கள் பலர் பதவி உயர்வு இல்லாமலே, 'ரிட்டயர்' ஆக வேண்டியிருக்கு'ன்னு அவா எல்லாம் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ----''போலி டாக்டர்கள் அதிகமாகிட்டாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... ''ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியத்தின் பல பகுதிகள்ல இருக்கிற, 'மெடிக்கல் ஷாப்'கள்ல, நோயாளிகளுக்கு ஊசி போடுறது பல வருஷங்களா நடக்கு... ''உத்தரகோசமங்கை வட்டார மருத்துவ அதிகாரிகள், இதை கண்டுக்காம இருக்கிறதால, மெடிக்கல் ஷாப் உரிமையாளர்கள், நோயாளிகளுக்கு ஊசி போட்டு, தாங்களாகவே மருந்து, மாத்திரைகளையும் வழங்குறாங்க... ''சமீபத்துல, தினைக்குளத்தில் ஒரு மெடிக்கல் ஷாப்ல நோயாளிக்கு சிகிச்சை குடுத்ததா தகவல் பரவுச்சு... இது பத்தி, திருப்புல்லாணி போலீசார்கிட்ட கேட்டா, 'எங்களுக்கு இது சம்பந்தமா எந்த புகாரும் வரலை... அப்படியே வந்தாலும், வட்டார மருத்துவ அலுவலர் தான் புகார் தரணும்'னு நழுவிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''மேயரை மாத்திடுவாங்கன்னு சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''மதுரை மாநகராட்சியில், சொத்து வரி நிர்ணயம் பண்ணியதுல, 200 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துட்டதா புகார்கள் வந்துச்சே... இது சம்பந்தமா முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, மண்டல மற்றும் நிலைக்குழு தலைவர்கள் ஏழு பேர் ராஜினாமா செஞ்சாங்க பா... ''அதுவும் இல்லாம, தி.மு.க.,வை சேர்ந்த மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்தை கைது பண்ணியிருக் காங்க... ஆனாலும், மேயர் பதவியில் இந்திராணி நீடிக்கிறாங்க பா... ''புதிய மேயரை தேர்வு பண்றதுல, மாவட்ட அமைச்சர்களான மூர்த்தி, தியாகராஜனுக்கு இடையில் போட்டி நடக்கு... இந்த சூழல்ல, சமீபத்துல மதுரைக்கு, ஆய்வு கூட்டத்துக்கு வந்த துணை முதல்வர் உதயநிதியிடம், 'மேயர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா'ன்னு நிருபர்கள் கேட்டாங்க பா... ''அதுக்கு, 'அதை, முதல்வர் பார்த்துக்குவார்'னு உதயநிதி நழுவிட்டாரு... ஆனாலும், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்களிடம், மேயர் தேர்வு பத்தி பேசிட்டு போயிருக்காரு பா... ''இதுக்கு இடையில, மேயர் பதவியை பிடிக்க சில பெண் கவுன்சிலர்கள், கட்சியின் முக்கிய புள்ளிகளிடம், சில லட்சங்களை, 'அட்வான்சா' குடுத்து வச்சிருக்காங்களாம்... 'கூடிய சீக்கிரமே புதிய மேயர் தேர்வு நடக்கும்'னு, தி.மு.க.,வினர் சொல்றாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய். அரட்டை முடிய, அனைவரும் கிளம்பி னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி