''தி.மு.க., மாவட்ட நிர்வாகி ஆபீஸ்ல இருந்த ஆவணங்களை எல்லாம், அ.தி.மு.க., வட்ட நிர்வாகி எடுத்துட்டு போய் மறைச்சு வச்சுட்டாரு பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்கிற்கு, தி.மு.க.,வுல பதவி வழங்க, சென்னையைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருத்தர் தான் பரிந்துரை பண்ணியிருக்காரு... இவரது ஆதரவுல, ஆயிரம்விளக்கு பகுதியில மனமகிழ் மன்றம் பெயர்ல, சீட்டாட்ட கிளப்புகள் ஜோரா நடக்குது பா...''இதுல, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலரும் பார்ட்னர்களா இருக்காங்க... இந்த கிளப்புகள்ல, மதுவும் தாராளமா புழங்குது பா...''சமீபகாலமா, போதை பொருட்கள் நடமாட்டமும் அதிகரிச்சிருக்குன்னு, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைச்சிருக்குது... ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை நடந்த அன்னைக்கு, தி.மு.க., மாவட்ட நிர்வாகி ஆபீஸ்ல இருந்த சில ஆவணங்களை, அ.தி.மு.க., வட்ட நிர்வாகி ஒருத்தர் எடுத்துட்டு போய், தன் கட்டுப்பாட்டுல மறைச்சு வச்சுட்டாராம் பா...'' என்றார், அன்வர்பாய்.''நிறைய வீடு இருந்தும், அரசு வீடும் வாங்கியிருக்காங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் தாலுகா, முருகமங்கலத்துல, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்புல, 1,260 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி, சமீபத்தில் திறப்பு விழா நடந்துச்சுங்க...''சொந்த வீடு இல்லாதவங்களுக்கு, இந்த திட்டத்துல ரொம்பவும் குறைஞ்ச விலையில வீடுகள் ஒதுக்குவாங்க... மாவட்ட அமைச்சர் பரிந்துரைன்னு சொல்லி, மறைமலை நகர் பகுதி கவுன்சிலர் ஒருத்தரும், பொறியாளர் ஒருத்தரும் சேர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 17 பேருக்கு வீடுகள் ஒதுக்கியிருக்காங்க...''இவங்களுக்கு சொந்தமா பல வீடுகள் இருக்குதுங்க... ஆனாலும், ஆளுங்கட்சியினர் சிபாரிசுல, அதிகாரிகள் விதிகளை மீறி வீடுகளை ஒதுக்கீடு பண்ணியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.''வாங்க ஆல்பர்ட்... அருண்குமார் உம்மை தேடிண்டு இருந்தாரே...'' என நண்பரை வரவேற்ற குப்பண்ணாவே, ''முன்னாள் அமைச்சர்கள் பனிப்போர் துவங்கிடுத்து ஓய்...'' என்றார்.''எந்த கட்சியில வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், சமீபத்துல விருதுநகர்ல புது வீடு கட்டி குடியேறியிருக்கார்... 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராயிண்டு இருக்கார் ஓய்...''இப்ப இருக்கற விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலர் செயல்பாடுகள் சரியில்லைன்னு, மேலிடத்துக்கு புகார்கள் போனதால, புது செயலரா பாண்டியராஜனை நியமிக்கலாமான்னு தலைமை யோசனை பண்ணிண்டு இருக்கு...''ஆனா, மாவட்டத்தையே தன் கன்ட்ரோல்ல வச்சுக்க விரும்பற, மேற்கு மாவட்ட செயலரான, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இதுல துளியும் விருப்பமில்ல ஓய்...''எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் ஆதரவு தனக்கு இருக்கிறதால, விருதுநகரை கிழக்கு மாவட்ட எல்லைக்குள்ள கேட்டு வாங்க பாண்டியராஜன் நினைக்கறார்... இப்ப, மேற்கு மாவட்டத்துல இருக்கற விருதுநகரை தாரை வார்க்க, ராஜேந்திர பாலாஜிக்கு விருப்பமில்ல...''இதனால, 'மாஜி' அமைச்சர்கள் ரெண்டு பேருக்கும் மத்தியில மறுபடியும் பனிப்போர் துவங்கிடுத்து ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் மவுனமானது.