உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பழனிசாமி வரவேற்புக்கு வசூல் நடத்தும் மாஜி எம்.எல்.ஏ.,

பழனிசாமி வரவேற்புக்கு வசூல் நடத்தும் மாஜி எம்.எல்.ஏ.,

''ப ரம ரகசியமா நடத்தி முடிச்சுடறா ஓய்...'' என்றபடியே, பில்டர் காபியை உறிஞ்சினார் குப்பண்ணா. ''என்னத்த பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர், திருவேற்காடு நகராட்சியில மாதாந்திர கூட்டங்கள் நடக்கும்... எல்லா நகராட்சிகள்லயும் பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் முன்னிலையில தான் கூட்டங்களை நடத்துவா ஓய்... ''ஆனா, இந்த ரெண்டு நகராட்சியிலும் யாரையும் அனுமதிக்காம, ரகசியமா கூட்டங்களை நடத்தறா... நகராட்சித் தலைவர்களான ஆளுங்கட்சியைச் சேர்ந்த, உஷா ராணி மற்றும் கிருஷ்ணமூர்த்தியிடம் அதிகாரிகள் எவ்வளவோ எடுத்து சொல்லியும், 'யாரையும் அனுமதிக்க முடியாது'ன்னு கறாரா சொல்லிட்டா... இதனால, நகராட்சி கூட்டங்கள்ல என்ன நடக்கறதுன்னு, அவாளுக்கு ஓட்டு போட்ட மக்களால தெரிஞ்சுக்க முடியறது இல்ல ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''பராமரிப்பு பணத்துல முறைகேடு பண்றாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... ''கோவை, கவுண்டம் பாளையத்துல, வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான அரசு வாடகை குடியிருப்பு இருக்கு... இங்க, எட்டு பிளாக்ல, 1,848 வீடுகள் இருக்குதுங்க... ''இதுக்கு வாட்ச்மேன்கள், லிப்ட் ஆப்பரேட்டர்கள், துாய்மை பணியாளர்கள், குடிநீர் சப்ளை, எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்த நிறுவனம் மூலமா, 95 ஊழியர்களை நியமிக்க அனுமதி குடுத்திருக்கா... பராமரிப்பு செலவுக்கு வருஷத்துக்கு, 4 கோடி ரூபாயை வாரியம் தருதுங்க... ''ஆனா, 2021 - 2025 வரை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், குறைவான பணியாளர்களை நியமிச்சு, பல கோடி ரூபாயை முறைகேடு பண்ணிடுச்சுங்க... இதுக்கு வாரியத்தின் அதிகாரிகள் சிலரும் உடந்தையா இருந்திருக்காங்க... ''இதனால, இங்க வசிக்கிற மக்கள், அடிப்படை வசதிகள் கிடைக்காம, அடிக்கடி போராட்டத்துல ஈடுபடுறாங்க... பராமரிப்பு பணிகள் சம்பந்தமா, தகவல் உரிமை சட்டத்துல தகவல்களை வாங்கியிருக்கிற வக்கீல் ஒருத்தர், அதை வச்சு அரசுக்கும் புகார் அனுப்பி இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''அடுத்து எங்க ஆட்சி தான்னு பேசியே வசூல் பண்றாரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி. ''யாருங்க அந்த அ.தி.மு.க., பிரமுகர்...'' என, பட்டென கேட்டார் அந்தோணிசாமி. ''வர்ற, 31 மற்றும் ஆக., 1ம் தேதின்னு ரெண்டு நாட்கள், துாத்துக்குடி மாவட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'மக்கள் யாத்ரா' நடத்த இருக்காரு... ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட புதியம்புத்துார், புதுக்கோட்டை ஆகிய இடங்கள்ல பழனிசாமி பேச இருக்காரு வே... ''இந்த இடங்கள்ல, தொகுதியின், 'மாஜி' எம்.எல்.ஏ., தலைமையில கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு வழங்க திட்டமிட்டிருக்காவ... அதுக்காக சொந்த பணத்தை செலவழிக்க முடியுமா வே... ''இதனால, 'மாஜி'யின் தலைமையில, அ.தி.மு.க., பிரமுகர்கள், அந்த பகுதியில் இருக்கிற தனியார் கெமிக்கல் நிறுவனம், மீன்கள் பதப்படுத்தும் ஆலைகளுக்கு போய், 'பழனிசாமி சுற்றுப்பயணம் இருக்கு... அடுத்து எங்க ஆட்சி தான்... அதனால, நன்கொடையை தாராளமா குடுங்க'ன்னு அன்பா பேசி வசூல் பண்ணுதாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி. ''மோகன், இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் புறப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
ஜூலை 25, 2025 16:40

கம்யூனிஸ்டுகளை உண்டியல் கட்சி என்று விமர்சிப்பவர்கள், இந்த வசூலுக்கு என்ன பெயர் வைப்பார்கள் லஞ்ச அட்வான்ஸ், அல்லது கமிஷன் முன்பணம் என்று வைக்கலாமா ?


S.V.Srinivasan
ஜூலை 25, 2025 08:14

மக்கள் சரி, யாத்ரா தமிழ் வார்த்தை மாதிரி தெரியலையே ??? அப்படியா சொன்னாரு.


S.L.Narasimman
ஜூலை 25, 2025 12:36

மக்கள் எழுச்சி பயணம். இவங்களுக்கு அவர் பயணத்தை மட்டம் தட்டனும்ன்னு நினைப்பு.


Anantharaman Srinivasan
ஜூலை 25, 2025 00:54

அடுத்து எங்க ஆட்சிதான் என வரவேற்புக்கு வசூல் நடத்தும் மாஜி எம்.எல்.ஏ., யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னேயென்பது போல் ஆட்சிக்கு வரும் முன்பே கை நீட்டும் படலம் ஆரம்பம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை