சென்னை: சிகிச்சைக்கான தொகையை வழங்காத காப்பீட்டு நிறுவனம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, சிகிச்சை தொகையுடன், 54,312 ரூபாயை வழங்க வேண்டும் என, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா நகரை சேர்ந்த இனியா, 32, என்பவர் தாக்கல் செய்த மனு: 'ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ்' நிறுவனத்தில், 15 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு எடுத்தேன். பிரீமியமாக, 21,782 ரூபாய் செலுத்தினேன். கடந்த 2024 மே 15 முதல் 2025 மே 14 வரை காப்பீடு காலம். திட்டத்தில் சேரும்போது, அனைத்து மருத்துவ சிகிச்சை சார்ந்த செலவுகள், பிரசவத்துக்கு பிந்தைய செலவுகளும் அடங்கும் என்றனர். காப்பீட்டில் சேர்ந்த பின் கர்ப்பம் தரித்து, மேத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். கடந்த ஜனவரியில் திடீரென வாந்தி, வயிற்றுப்போக்குக்கு சிகிச்சை பெற்றேன். பரிசோதனையில், இரைப்பை குடல் அழற்சி இருப்பது தெரிய வந்ததால், உள்நோயாளியாக சிகிச்சை பெற்றேன். சிகிச்சை கட்டணமாக, 34,312 ரூபாயை, மருத்துவமனை நிர்வாகம் வசூலித்தது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், மகப்பேறுக்கு முந்தைய செலவு என்பதால் தரமுடியாது என, பிப்., 15ல் விண்ணப்பத்தை நிராகரித்தது. சேவை குறைபாடுடன் நடந்த காப்பீடு நிறுவனம், ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பி.ஜிஜா, உறுப்பினர் டி.ஆர்.சிவக்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்து, ஆணையம் பிறப்பித்த உத்தரவு: மருத்துவ ஆவணங்களை பார்த்தபோது, வாந்தி, கடும் வயிற்று போக்கால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, மனுதாரர் கடந்த ஜன., 31ல் வீடு திரும்பி உள்ளார். முதற்கட்ட சிகிச்சைக்கு பின், மனுதாரருக்கு இரைப்பை குடல் அழற்சி கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால், மனுதாரர் மகப்பேறுக்கு முந்தைய சிகிச்சை பெற்றதாக, விண்ணப்பத்தை காப்பீடு நிறுவனம் நிராகரித்துள்ளது. இத்தகைய செயல் ஏற்கக்கூடியது அல்ல. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு, சிகிச்சை தொகை, 34,312 ரூபாய், சேவை குறைபாடுக்கு 10,000 ரூபாய், வழக்கு செலவாக 10,000 ரூபாய் என, மொத்தம், 54,312 ரூபாயை, எட்டு வாரங்களுக்குள் காப்பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டும். தவறினால், 9 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.