உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  தொகுதி மாறுகிறாரா தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்?

 தொகுதி மாறுகிறாரா தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்?

ப ட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, ''பட்டும் படாமலும் எதிர்க்கிறாங்க பா...'' என, பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய். ''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா. ''திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கிற குப்பை கழிவுகளை, சின்னகாளிபாளையம் கிராமத்தில் கொட்டுறதை கண்டிச்சு, அப்பகுதி மக்கள் எல்லாரும் போராட்டம் நடத்துறாங்கல்ல... வழக்கமா, இந்த மாதிரி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட போராட்டங்கள்ல, கம்யூ., கட்சியினர் தான் முன்னாடி நிற்பாங்க பா... ''ஆனா, ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கிறதால, கம்யூ., கட்சியினர் அடக்கியே வாசிக்கிறாங்க... திருப்பூர் இந்திய கம்யூ., கட்சி எம்.பி., சுப்பராயன், போன வாரம் பத்திரிகையாளர்களை கூப்பிட்டு, குப்பை பிரச்னைக்காக, வர்ற 29ம் தேதி, அதாவது நாளைக்கு போராட்டம் நடத்தப் போறதா அறிவிச்சாரு பா... ''ஆனா, திருப்பூர், பல்லடத்தில் நாளை நடக்கிற தி.மு.க., மகளிர் அணி மாநாட்டுல கலந்துக்க முதல்வர் ஸ்டாலின் வர்றதால, கம்யூ.,க்கள் போராட்டத்தை ஒத்தி வச்சுட்டாங்க... 'குப்பை விவகாரத்துல, ஆளுங்கட்சி மனம் நோகாம கம்யூ.,க்கள் நடந்துக்கிறாங்க'ன்னு, உள்ளூர் மக்கள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''பொறுப்பில்லாம பறந்துட்டார்னு புகார் சொல்லுதாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''தமிழகத்துல, எல்லா கட்சிகளும் தேர்தல் பரபரப்புல இருக்குல்லா... விருப்ப மனுக்கள் வாங்குறது, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, கூட்டணி பேச்சுகள்னு, எல்லா கட்சி தலைவர்களுமே சுறுசுறுப்பா இருக்காவ வே... ''தி.மு.க., கூட்டணியில் இருக்கிற, காங்., கட்சியின் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகையோ, சொந்த வேலையா, போன வாரமே லண்டன் புறப்பட்டு போயிட்டாரு... தமிழக காங்கிரசிலும் புதிய மாவட்ட தலைவர்கள் தேர்வு, விருப்ப மனுக்கள் குடுக்கிற பணிகள் எல்லாம் நடந்துட்டு இருக்கு வே... ''விருப்ப மனுக்கள் தாக்கலுக்கு கடைசி தேதியான, வர்ற, 30ம் தேதி தான் செல்வப்பெருந்தகை சென்னை திரும்புதாரு... 'கட்சி பணிகளை கவனிக்காம, இப்படி பொறுப்பில்லாம டூர் போகலாமா'ன்னு அவரது எதிர் கோஷ்டியினர் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி. ''தொகுதி மாற முடிவு பண்ணிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா. ''கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ்... இவர், 2021 சட்டசபை தேர்தல்ல, தி.மு.க., கூட்டணியில், திருச்சி கிழக்கு தொகுதியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆனாருங்க... ''முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவரா இருந்தும், திருச்சியில் அமைச்சர்கள் நேரு, மகேஷுக்கு இடையில நடக்கிற பனிப்போரால, தன் தொகுதியில் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாத ஆதங்கத்துல இருக்காருங்க... ''தொகுதி மக்களின் சின்ன சின்ன பிரச்னைகளை கூட அவரால தீர்க்க முடியல... வர்ற தேர்தல்லயும் இங்க ஜெயிச்சா, மறுபடியும் ரெண்டு அமைச்சர்களுடன் மல்லுக்கட்ட முடியாதுன்னு நினைக்கிறாரு... ''இதனால, சென்னை அல்லது கன்னியாகுமரி மாவட்டத்துல ஒரு தொகுதியை வாங்கிட்டு, திருச்சிக்கு டாட்டா காட்ட முடிவு பண்ணிட்டதா, அவரது ஆதரவாளர்கள் சொல்றாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி. பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ