மேலும் செய்திகள்
விஜய் கட்சியில் சேர தயாராகும் மாஜி அமைச்சர்!
11-Sep-2024
''பணம் குடுத்தா தான் காரியம் நடக்குது பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.''எந்த துறையில ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.''நீலகிரி மாவட்டம்,பந்தலுார் மற்றும் உப்பட்டி பகுதிகளில், பழங்குடியின மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் அதிகமா வசிக்கிறாங்க... இவங்க கிராமங்கள்ல, மின் அழுத்த குறைபாட்டை சரி பண்ற துக்காக, புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிகளை மின்வாரியம் செய்துட்டு வருதுப்பா...''சில பகுதிகள்ல மின்வாரிய ஊழியர்கள், 'டிரான்ஸ்பார்மர்களை கோவையில இருக்கிற குடோன்கள்ல இருந்து எடுத்துட்டு வர்றதுக்கு அரசு நிதி ஒதுக்கல... கிராம மக்கள் பணம் குடுத்தால் தான், லாரிகள்ல எடுத்துட்டு வர முடியும்'னு சொல்லி பணம் வசூல் பண்றாங்க பா...''பணம் தர்ற கிராமங்கள்ல மட்டுமே, புது டிரான்ஸ்பார்மர்களை அமைக்கிறாங்க... மற்ற கிராமங்களை கண்டுக்க மாட்டேங்கிறாங்க... இது சம்பந்தமா, முதல்வருக்கும் புகார்கள் போயிருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.''தளபதி பி.ஏ.,வே என் பாக்கெட்டுலன்னு மிரட்டறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.''சென்னையை ஒட்டி, திருவேற்காடு நகராட்சி இருக்கோல்லியோ... இங்க, ஆளுங்கட்சி முக்கிய புள்ளி ஒருத்தரது செயல்பாடுகள் பத்தி வண்டி வண்டியா புகார்கள் வாசிக்கறா ஓய்...''நகராட்சியில கடந்த ஏழு மாசத்துல மட்டும்எந்த பணிகளுமே செய்யாம, பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்காம்... மழை காலத்தில் நிறைய நிவாரண பணிகள் நடந்தது மாதிரி, போலி ரசீதுகள் தயார் செய்து, பணத்தை சாப்பிட்டிருக்கா ஓய்...''அம்மா உணவகத்தில் உணவே தயாரிக்காம,சமைத்ததா கணக்கு காட்டி பல கோடி முறைகேடு நடந்திருக்கு...இதை தட்டி கேட்ட ஒரு கவுன்சிலரை தகுதி நீக்கமே பண்ணிட்டார் ஓய்...''அந்த கவுன்சிலருக்குமுக்கிய புள்ளி கொலை மிரட்டலும் விடுத்திருக்கார்... அதுவும் இல்லாம,'நீங்க யார்கிட்ட புகார் பண்ணாலும் எனக்கு கவலையில்லை... ஏன்னா, தளபதியின் பி.ஏ.,வே என் பாக்கெட்ல'ன்னும் மிரட்டறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''வீட்டு வாசல்ல பஸ் ஸ்டாப் அமைக்க, 10 லட்சம் ரூபாய் குடுத்திருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.''யாருவே அந்த தாராள பிரபு...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயனை தான் சொல்றேன்... இவரது வீடு மற்றும் அலுவலகம் அம்பாள் நகர்ல இருக்குதுங்க...''அந்த நகரின் நுழைவாயில்ல, புது பஸ் ஸ்டாப் அமைக்க, தன் தொகுதி நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கி, பணிகளையும் சமீபத்துல துவக்கி வச்சாருங்க...''விளாத்திகுளம் தொகுதியில் பல கிராமங்கள்ல பஸ் ஸ்டாப் இல்லாம மக்கள் சிரமப்படுறாங்க... ஆனா, 'அவர் வீட்டுக்கு முன்னாடி பஸ் ஸ்டாப் கட்ட, விதிகளை மீறி நிதி ஒதுக்கிஇருக்கார்'னு எதிர்க்கட்சியினர் புகார் சொல்றாங்க...''அந்த ஏரியாவுல பள்ளிக்கூடம், பால் பண்ணைன்னு பல தொழில்களை எம்.எல்.ஏ., நடத்துறாரு... அதுக்காகவே, இந்த பஸ் ஸ்டாப்புக்கு நிதி ஒதுக்கியிருக்கார்னும் சொல்றாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.''நமக்கு நாமே திட்டம்கறது இது தானா ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
11-Sep-2024