கடையில் ஆஜரான பெரியவர்களுக்கு, சூடான இஞ்சி டீயை வழங்கினார் நாயர். ''எனக்கு காபி தான் வேணும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.டீயை பருகியபடியே, ''ரெய்டு பீதியில, சட்டுபுட்டுன்னு காரியத்தை முடிக்கிறாங்க...'' என, விவாதத்தை ஆரம்பித்தார்அந்தோணிசாமி.''எந்த துறையில பா...''என கேட்டார், அன்வர்பாய்.''அரசு அலுவலகங்கள்ல,தீபாவளி வசூல் வேட்டைதீவிரமா நடக்கிறதா புகார்கள் வருதுங்க... இதனால, பல வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்ல, லஞ்ச ஒழிப்பு துறையினர், அதிரடி சோதனை நடத்துறாங்க...''இதை பார்த்துட்டு, தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதி ஆர்.டி.ஓ., அலுவலகத்துல உஷாராகிட்டாங்க... அதாவது, அலுவலக நேரம் துவங்குறதுக்கு முன்னாடி, காலையில, 9:00 மணிக்கே இருசக்கர,இலகுரக மற்றும் கனரக ஓட்டுனர் உரிமம்வழங்குறது, உரிமம் புதுப்பிக்கிறது போன்ற பணிகளை, வேக வேகமா முடிச்சிடுறாங்க...''ஆபீஸ் பக்கத்துல இருக்கிற கடைகள்லயும் ெரய்டு நடக்கலாம்னு, முன்னெச்சரிக்கையா, அந்த கடைகளை காலை 11:00 மணிக்கே மூடிட்டு போக சொல்லிடுறாங்க... இதனால, மலை கிராமங்கள்ல இருந்து ஓட்டுனர் உரிமம் வாங்க, 11:00 மணிக்கு மேல வர்றவங்களை, 'நாளைக்கு காலையில வாங்க'ன்னு அலைய விடுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''கிட்டத்தட்ட, 10 வருஷமா அசையாமஇருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''திருவள்ளூர்ல, மாவட்ட கருவூலம் மற்றும் 10 சார் கருவூலங்கள் இருக்கு... இங்க உதவி கருவூல அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், கூடுதல் சார்- கருவூல அலுவலர்கள்னு பலர் பணியில இருக்கா ஓய்...''அரசு விதிப்படி, ஒரே இடத்துல மூணு வருஷத்துக்கு மேல பணியில இருக்கறவாளை இடமாறுதல் பண்ணணும்... ஆனா, திருவள்ளூர் கருவூல அதிகாரிகள், ஊழியர்கள்னுபலரும் அஞ்சு முதல் 10வருஷமா ஒரே இடத்துலபெஞ்ச் தேய்ச்சுண்டு இருக்கா ஓய்...''இதுல சிலர், 'புரமோஷன்' வாங்கியும், அதே இடத்துல நீடிக்கறா...இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பலர், வெளிமாவட்ட கருவூலங்கள்ல பணியில இருக்கா... இங்க இருக்கறவா இடமாறுதல்ல போகாம இருக்கறதால, அவா சொந்த மாவட்டத்துக்கு வர முடியாம தவிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''பழைய இரும்புல பணம் பார்த்துட்டாவ வே...'' என, கடைசி மேட்டரை கையில் எடுத்தார் பெரியசாமி அண்ணாச்சி.''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.''செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் மின்வாரிய அலுவலகத்தில் சேகரமாகும் பழைய அலுமினிய மற்றும் இரும்பு பொருட்களை, திம்மாவரம் பகுதியில் இருக்கிற மின் அலுவலக ஸ்டோருக்கு அனுப்பிடுவாவ... ''அங்க இருக்கிற அதிகாரிகள், ஊழியர்கள்சிலர், 820 கிலோ இரும்பு,190 கிலோ அலுமினிய பொருட்களை, ஆப்பூர்லஇருக்கிற பழைய இரும்புகடையில எடைக்கு போட்டிருக்காவ வே...''பழைய இரும்பு கடையின் வாகனம், மின்வாரிய அலுவலகத்துக்கேவந்து பொருட்களை அள்ளிட்டு போச்சு... இந்த பணத்துல, அதிகாரிகள் தலா, 2,000 ரூபாய் பிரிச்சுக்கிட்டு, மீதி பணத்துல ஆயுத பூஜையை கோலாகலமா கொண்டாடியிருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடியவே, பெரியவர்கள் கிளம்பினர்.