மேலும் செய்திகள்
முதல்வர் அலுவலகம் பெயரில் மிரட்டும் அதிகாரி!
11-Sep-2025
''இ வங்களும் ஆரம்பிச்சுட்டாங்களேன்னு புலம்புறாங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி. ''யாரை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''கோவை, கணபதி பகுதியில் இருக்கும் கட்டபொம்மன் வீதியில், பாதாள சாக்கடை பணிகள் நடக்கு... இந்த சூழல்ல, 400 மீட்டர் தொலைவுக்கு பணிகளை நிறுத்தி வைக்கும்படி, மாநகராட்சியின் ஆளுங்கட்சி பெண் புள்ளி சொல்லிட்டாங்க... ''இது, மாநகராட்சி கமிஷனர் காதுக்கு போக, 'பணிகளை ஏன் நிறுத்தச் சொன்னீங்க... மழைக்காலம் வர்றதுக்குள்ள பணிகளை முடிச்சிடலாமே'ன்னு சொல்லியும், அவங்க கேட்கலைங்க... 'இதுக்கு முன்னாடி அந்த பதவியில் இருந்தவங்களும் இப்படித்தான் செயல்பட்டு, பதவியை பறிகொடுத்தாங்க... இவங்களும் அதே வழியில போறாங்களே'ன்னு தி.மு.க.,வினரே புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''பெருமாளோட மனைவி அந்த ரங்கநாயகி தான் கோவை கணபதி மக்களைக் காப்பாத்தணும் ஓய்...'' என்றார் குப்பண்ணா. ''பெங்களூருக்கு, மூணு வக்கீல்களுடன் போயிருக்காரு பா...'' என, அடுத்த தகவலைத் தொடங்கிய அன்வர்பாய், தொடர்ந்தார்... ''திண்டுக்கல், மரியநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருத்தரை, கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சமீபத்துல கைது பண்ணியிருக்காங்க... விசாரணையில், அவர் பயன்படுத்திய மொபைல் போன் நம்பர், திண்டுக்கல் மாநகராட்சியின் துணை பதவியில், 'ராஜ்யம்' பண்றவரின் மகன் பெயரிலான ஆவணங்களை கொடுத்து வாங்கியது தெரிஞ்சது பா... ''இது சம்பந்தமா, அம்மாநில போலீசார் திண்டுக்கல் வந்து, 'முறையான ஆவணங்களுடன் பெங்களூரு வந்து விளக்கம் தாங்க'ன்னு சம்மன் குடுத்துட்டு போயிருக்காங்க... இதனால தி.மு.க., புள்ளி, மூணு வக்கீல்களுடன் பெங்களூர்ல முகாமிட்டிருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய். ''சரி வே... போனை வச்சிடுதேன்...'' என்றபடி கடைக்கு வந்த பெரியசாமி அண்ணாச்சி, ''இந்த ராஜப்பாவுக்கு ஏதோ வேலையாகணுமாம் வே...'' என நண்பர்களிடம் விசனப்பட்டார். ''மீண்டும் வசூல்ல இறங்கிட்டா ஓய்...'' என, கடைசி தகவலைத் துவக்கினார் குப்பண்ணா. ''யாரு வே அது...'' என கேட்டார் அண்ணாச்சி. ''செங்கல்பட்டு அடுத்த பரனுார் ஜி.எஸ்.டி., சாலையில், 'டோல்கேட்' இருக்கோல்லியோ... இதுக்கு ஊழியர்களை நியமிக்கற டெண்டரை, அந்த பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருத்தர் எடுத்திருக்கார் ஓய்... ''ரவுடியின் ரெண்டு மகன்கள் தான், ஊழியர்களை வேலை வாங்கறா... ''டோல்கேட்ல நடக்கற அடாவடிகளை போலீசார் கண்டுக்காம இருக்க, மாசா மாசம், 'கப்பம்' கட்டிடறா... இது, மாவட்டத்தின் முக்கிய அதிகாரிக்கு தெரியவர, போலீஸ் அதிகாரிகளை கடுமையா எச்சரிக்கை பண்ணியிருக்கா ஓய்... ''இதனால, சில வாரங்களா அடக்கி வாசித்த போலீசார், இப்ப திரும்பவும் டோல்கேட் வசூலை துவங்கிட்டா... அதே நேரம், முன்னாடி மாதிரி புரோக்கர்கள் யாரையும் வச்சுக்காம, இவாளே நேரடியா போய் வசூல் பண்ணிக்கறா ஓய்...'' என முடித்த குப்பண்ணா, ''நாயரே... என் நண்பர் பிரபுன்னு ஒருத்தர் இங்கே வருவார்... அவருக்கு டீ குடும்...'' எனக் கூறி கிளம்பினார்; மற்றவர்களும் புறப்பட்டனர்.
11-Sep-2025