உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / குறுக்கு வழி தரிசனத்தால் குறையும் கோவில் வருவாய்!

குறுக்கு வழி தரிசனத்தால் குறையும் கோவில் வருவாய்!

டபராவில் நுரை பொங்க, நாயர் எடுத்து வந்த பில்டர் காபியை வாங்கியபடியே, ''மரபையும், சட்டத்தையும் மீறி நியமனம் பண்ணியிருக்கா ஓய்...'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா. ''எந்த துறையில பா...'' என, கேட்டார் அன்வர்பாய். ''சென்னை மாநகர போக்குவரத்து கழகமான, எம்.டி.சி.,யில், திருப்பதி கடவுள் பேர் கொண்ட அதிகாரி, கடந்த மே மாசம், 'ரிட்டயர்' ஆனார்... இவரை, அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களின் போர்டு உறுப்பினராகவும், சாலை போக்குவரத்து நிறுவனமான ஐ.ஆர்.டி., குழு உறுப்பினராகவும் நியமித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் செப்., 26ல் உத்தரவு போட்டிருக்கா ஓய்... ''அதுவும், ஜூன் 2ல் இருந்து முன்தேதியிட்டு இந்த பதவிகளை வழங்கியிருக்கா... பொதுவா, ஒரு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற அதிகாரியை, அதே நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினரா நியமிக்க, சட்டத்துல இடமில்லையாம்... அதேபோல, 'மரபு ரீதியாகவும் இது தப்பு'ன்னு போக்குவரத்து கழக வட்டாரங்கள்ல பேசிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''வெங்கட்ராஜன்... உங்களை அப்புறம் நானே கூப்பிடுறேன்...'' என்று இணைப்பை துண்டித்த அந்தோணிசாமி, ''வீரர்களை விரட்டாத குறையா வெளியேத்தி இருக்காங்க...'' என்று தொடர்ந்தார்... ''தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை நடத்துது... மாவட்ட அளவிலான போட்டிகள் முடிஞ்சு, கடந்த, 2ம் தேதி முதல் வர்ற, 14ம் தேதி வரை மாநில அளவிலான போட்டிகள் பல ஊர்கள்லயும் நடக்குதுங்க... ''சென்னையில் கலந்து கொண்ட வீரர்களுக்கு தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து செலவு எல்லாத்தையும் ஆணையமே தரணும்... ஒரு அணி தோல்வி அடைஞ்சுட்டா, போட்டி நடந்த அன்னைக்கு முழுக்க விடுதியில் தங்கிக்கலாம்... இரவு சாப்பாட்டை முடிச்சுட்டு, ஊர்களுக்கு போகலாம்... ''ஆனா, நடப்பாண்டு, தோல்வி அடைந்த அணியினரை, தங்கும் விடுதியில் இருந்து மதியமே வெளியேத்திடுறாங்க... இரவு சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்யலைங்க... இதனால, பகல் முழுக்க ரயில் மற்றும் பஸ் நிலையங்கள்ல வீரர்கள் காத்துக் கிடந்து, ராத்திரி ஊருக்கு கிளம்பிடுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''லட்சக்கணக்கில் கோவிலுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துதாவ வே...'' என, கடைசி தகவலை தொடங்கினார், பெரியசாமி அண்ணாச்சி. ''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வர்றாங்கல்லா... இங்க, கட்டண ரசீது வாங்காம பக்தர்களை தரிசனம் பண்ண வைக்க, பல புரோக்கர்கள் சுத்திட்டு இருக்காவ... ''இதுல, கோவில் பெண் அதிகாரி மற்றும் ஊழியர் தரப்புல ஒரு புரோக்கர் குழு செயல்படுது... இன்னொரு புரோக்கர் குழு, சமயபுரம் போலீஸ் அதிகாரி மற்றும் ஊர்க்காவல் படையினர் சிலரது தலைமையில் செயல்படுது வே... ''தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்களை, குறுக்கு வழி தரிசனத்துக்கு இவங்க அழைச்சிட்டு போயிடுதாவ... இதனால, கோவிலுக்கு கட்டண ரசீது மூலம் கிடைக்கக்கூடிய பல லட்சம் ரூபாய் வருவாய் பாதிக்கப்படுது வே...'' என முடித்தார், அண்ணாச்சி. ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''சொல்லுங்கோ ரகுராம்... எந்த ஸ்டேஷன்ல இருக்கேள் இப்போ... கோவிலுக்கு நித்யா, பாபு, அன்பு எல்லாம் வந்துட்டாளா... இதோ வர்றேன்...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

baala
அக் 14, 2025 10:32

கடவுளின் இடத்தில் ஆடுபவர்களை ஆண்டவன் பார்த்துக்கொள்வான். கொஞ்ச காலம் ஆகலாம்.


D.Ambujavalli
அக் 12, 2025 18:43

இத்தகைய அனுபவம் எங்களுக்கு ஸ்ரீரங்கத்தில் ஏற்பட்டது இவர்கள் சுருட்டியது போக கோவிலுக்கு எதுவும் மிச்சம் இருக்காது போலிருக்கிறது


V Gopalan
அக் 12, 2025 16:27

Gone are the days when the devotees used to go temple for their getting relaxation from all kind of mental agony etc - used to go Madurai Meenakshi Amman temple very frequently and now it has become a nightmare and now stand outside from West Towers worship and come back. Similarly, went twice to Vaitheeswaran Kovil when it was very very easily accesssible but now made with many kind of rails installed. Depositing the mobiles is one more kind of revenue for the temples. But, it is very much happy to visit Tanjore Peria Kovil, Tiruvarur. Srivanjiyam, Thiruvaiyaru temples where there is no this kind of difficulties. Devotees who feel aggrieved, can visit the temples where there is no more problems.


Balaji Bakthavathsal
அக் 12, 2025 09:34

நானும் நேரில் அவதிப்பட்டேன். கோவிலுக்கு செல்வதற்கே வெறுப்பேற்படுகிறது.


CHELLAKRISHNAN S
அக் 12, 2025 14:43

true


நிக்கோல்தாம்சன்
அக் 12, 2025 06:40

எனது நண்பர்கள் கூறியது , சமயபுரம் கோவிலுக்கு போவதையே விட்டுவிடுவதாக கூறும் அளவிற்கு ஆளும்கட்சியினரின் ஆட்டமும் , அதிகாரிகளின் கூட்டமும் இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன் . உண்மை என்று இப்போ நம்புகிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை