“பிளாக் லிஸ்ட் கம்பெனிக்கு, 'டெண்டர்' குடுத்திருக்காவ வே...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.“எந்த ஊருலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.“சென்னை மயிலாப்பூர்லயும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்லயும் இருக்கிற பிரசித்தி பெற்ற கோவில்கள்ல, மின்சாதன புனரமைப்பு பணிகளை செய்ய, ரெண்டு நிறுவனங்களுக்கு டெண்டர் குடுத்திருக்காவ... இந்த கம்பெனிகள், அறநிலைய துறையின் திருப்பணிகள் பிரிவுல இருக்கிற அதிகாரிக்கு வேண்டப்பட்டதுன்னு சொல்லுதாவ வே...“இதுல ஒரு நிறுவனம், கடந்த அ.தி.மு.க., ஆட்சியிலும் செல்வாக்கா இருந்திருக்கு... இன்னொரு நிறுவனம் மீது, போலீஸ்ல எப்.ஐ.ஆரும் பதிவாகி, 'பிளாக் லிஸ்ட்'லயே இருக்காம்... இதனால, 'இந்த நிறுவனங்கள் பணிகளை சரியா செய்யுமா'ன்னு விபரம் தெரிஞ்ச பக்தர்கள் முணுமுணுக்காவ வே...” என்றார், அண்ணாச்சி.“என்கிட்டயும் கோவில் அதிகாரி கதை ஒண்ணு இருக்கு ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...“மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல, இணை கமிஷனரா இருக்கறவர் கிருஷ்ணன்... சில நாட்களுக்கு முன்னாடி, உள்ளூர் அமைச்சர் தியாகராஜனின் தீவிர ஆதரவாளரின் மைத்துனர், சுவாமி தரிசனம் பண்றதுக்காக, 'பாஸ்' வாங்கிண்டு வந்திருக்கார் ஓய்...“அப்ப, எதிர்ல வந்த இணை கமிஷனர், 'இது, வி.ஐ.பி.,க்கள், டோனர்கள் போற பாதை... வேற வழியில போங்கோ'ன்னு சொல்லியிருக்கார்... பாஸ் வச்சிருந்தவரோ, 'நான் டோனர் இல்ல, ஓனர்... கோவில் பக்கத்துல கடை வச்சிருக்கேன்'னு எகத்தாளமா பதில் தந்திருக்கார் ஓய்...“டென்ஷன் ஆன கிருஷ்ணன், அவர்ட்ட இருந்த பாசை வாங்கி கிழிச்சு போட்டுட்டு போயிட்டார்... இதை, அமைச்சர் கவனத்துக்கு அவரது ஆதரவாளர்கள் எடுத்துண்டு போயிருக்கா ஓய்... அதோட, 'கிருஷ்ணன், நம்ம கட்சிக்காராளை எப்பவுமே மதிக்க மாட்டேங்கறார்... ஏதாவது பண்ணுங்கோ'ன்னு துாபம் போட்டுண்டு இருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா.“போட்ட சபதத்துல ஜெயிச்சுட்டாரு பா...” என்றார், அன்வர்பாய்.“யாருவே அது...” என கேட்டார், அண்ணாச்சி.“திருப்பூரை சேர்ந்த, செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதனுக்கு அரசு சார்புல ஒரு பி.ஏ.,வை நியமிச்சாங்க... இவர், தாராபுரம், காங்கேயம் உட்பட மாவட்டம் முழுக்க மணல் கடத்தல் கும்பலுக்கு துணை போறதும், அதிகாரிகளை மொபைல் போன்ல மிரட்டி காரியம் சாதிக்கிறதுமா இருந்தாரு பா...“மணல் கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய அதிகாரியை போன்ல மிரட்டி, வாகனத்தை விடுவித்த புகார்ல சிக்கிட்டதால, அவரை வருவாய் துறைக்கு மாத்தினாங்க... ஆனா, அங்க போகாம, 'மறுபடியும் பி.ஏ.,வா வருவேன்'னு சபதம் போட்டிருந்தாரு பா...“இதுபத்தி கலெக்டரிடமே சிலர் புகார் வாசிக்க, அவரோ, 'பி.ஏ., மேல நடவடிக்கை எடுத்தாச்சு... அவர் புது இடத்துல சேர்றாரு, சேராம போறாரு... உங்க வேலையை பாருங்க'ன்னு சொல்லிட்டாரு பா...“சபதம் போட்ட மாதிரியே மறுபடியும் அமைச்சருக்கு பி.ஏ.,வா அதே இடத்துக்கு அவர் வந்துட்டார்... அவரது செல்வாக்கை பார்த்து ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் மிரண்டு போயிருக்காங்க பா...” என முடித்தார், அன்வர்பாய்.“வினோத் இங்கன உட்காருங்க...” என, நண்பருக்கு இடம் தந்தபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.