உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பி.டி.ஓ.,க்களை மிரட்டிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,

பி.டி.ஓ.,க்களை மிரட்டிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,

''மக்கள் வரிப்பணம் கொள்ளை போறது ஓய்...'' என்றபடியே, நண்பர்கள் கூட்டத்தில் சங்கமித்தார் குப்பண்ணா. ''எங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியில் போன வருஷம் மட்டும், 70 கோடி ரூபாய்க்கு மேல வளர்ச்சிப் பணிகள் நடந்திருக்கு... ஆனா, வார்டுகள்ல எந்த வேலையும் நடக்கல ஓய்...''சில வார்டுகள்ல, 'டெண்டர்' விட்டு அரையும், குறையுமா பணிகளை செய்து, பணத்தை சாப்பிட்டிருக்கா... இது சம்பந்தமா, நகர்மன்ற கூட்டங்கள்ல, ஆளுங்கட்சி கவுன்சிலர்களே புகார் தெரிவிச்சிருக்கா ஓய்...''அதுமட்டும் இல்லாம, ஏற்கனவே செய்து முடித்த பணிகளுக்கும் பில் போட்டு, பணத்தை எடுத்திருக்கா... இதுக்கு, அதிகாரிகளும் ஒத்தாசையா இருந்திருக்கா ஓய்...''வளர்ச்சி பணிகள்ல, வால்பாறை நகராட்சி தலைமைக்கு 5 பர்சன்ட், நகர ஆளுங்கட்சி முக்கியப் புள்ளிக்கு 5 பர்சன்ட் கமிஷன் கரெக்டா போயிடறது... மக்கள் வரிப்பணம், தனிநபர்கள் பாக்கெட்டுக்கு போறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.ஒலித்த மொபைல் போனை எடுத்த அந்தோணிசாமி, ''சொல்லுங்க சுதாகர்... சுந்தரவள்ளி மேடம்கிட்ட பேசிட்டு உங்களுக்கு கால் பண்றேன்...'' என்றபடியே வைத்தவர், ''முக்கியப் பதவியை பிடிக்க முட்டி மோதுறாருங்க...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார்.''யாருவே அது...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''செங்கல்பட்டு மின்பகிர்மான வட்டத்துல, பெரிய அதிகாரியா இருந்து போன வருஷம், 'ரிட்டயர்' ஆனவரை தான் சொல்றேன்... இவர் பணியில இருந்தப்ப, இவருக்கு கீழே பணிபுரிந்த அதிகாரிகள் மீது புகார்கள் வந்தா, அவங்க மேல நடவடிக்கை எடுக்காம, 'கட்டிங்' வாங்கிட்டு கமுக்கமா இருந்துடுவாருங்க...''இந்த அதிகாரியின்பேருக்கு முன்னாடி, 'மூணு லட்சம்'னு அடைமொழி போட்டே, துறையில கிண்டல் அடிப்பாங்க... ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் தனியார் தொழிற்சாலைக்கு, ஏற்கனவே இரண்டு அதிகாரிகள் நிராகரித்த புராஜெக்டை இவர் ஓகே பண்ணி, மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்படுத்திட்டாருங்க...''அவரது கடைசி மாத பணியிலகூட, தொழிற்சாலைகளுக்கு டிரான்ஸ்பார்மர் அமைக்கிறதுல நிறைய முறைகேடு பண்ணிட்டார்னு புகார்கள் வந்துச்சு... ஆனாலும், எந்த பிரச்னையும் இல்லாம சுமுகமா ரிட்டயர் ஆகிட்டாருங்க...''இப்ப, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் பதவியைப் பிடிக்க, பணப்பெட்டியுடன் காய் நகர்த்திட்டு இருக்காருங்க... இந்த பதவிக்கு நுாற்றுக்கும் மேற்பட்டவங்க விண்ணப்பிச்சிருந்தாலும், இவருக்குதான் வாய்ப்பு அதிகம்னு சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''அதிகாரிகளை மிரட்டுதாரு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...''ஊரக உள்ளாட்சிகள்ல தலைவர்கள் பதவிக்காலம் முடிஞ்சு, தனி அலுவலர்கள் பொறுப்புக்கு வந்துட்டாங்கல்லா... ஊராட்சி தொடர்பான பணிகளை, ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் தான் கவனிக்காவ வே...''திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஒருத்தர், தன் தொகுதிக்கு உட்பட்ட பி.டி.ஓ.,க்களை கூப்பிட்டு, ரகசிய கூட்டம் நடத்தியிருக்காரு... அப்ப, 'ஒன்றியத்துல புதிய டெண்டர்களை, நான் சொல்ற ஆளுங்கட்சியினருக்கு தான் தரணும்... அப்படி செய்யலன்னா, மேலிடத்துல பேசி என்ன செய்யணுமோ, அதை செய்வேன்'னு மிரட்டி அனுப்பியிருக்காரு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜன 31, 2025 23:14

நடக்கிற லஞ்சம் ஊழல் கொலை கொள்ளை பாலியல் குற்றங்களுக்கு விடிவுகாண, 2026 தேர்தலுக்கு முன்னால் துணிந்து, மத்திய உள்துறை இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்யவில்லையென்றால் தமிழ்நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.


Dharmavaan
ஜன 31, 2025 07:31

கேவலமான உடனே அரசு நீக்கப்பட வேண்டும் மோடி துணிய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை