கோடையின் கொடை!
முக்கனிகளாக விளங்குபவை, மா, பலா, வாழை. பழங்களின் அரசனாக விளங்கும் மா, நம் தேசிய கனி. உலக அளவில் விரும்பி சுவைக்கப்படுகிறது. இதற்கு இணையான ருசியில்லை.இந்தியாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மா ரகங்கள் உள்ளன; சில ரகங்களே மிகவும் ருசியானவை. மாம்பழத்துக்கு மட்டும் அல்ல; காய், பிஞ்சுக்கு கூட தனி சுவை உண்டு. சமையல் பக்குவத்தால் வித்தியாசமான ருசியை புசிக்கலாம். மாவடு, மாங்காய், மாம்பழம் என பேச்சு வந்தாலே, நாவில் எச்சில் ஊறும்.மா மரத்தில் கல்லெறிந்து, காய்களை சுவைக்கும் சிறுவர்களின் மகிழ்ச்சி அளவிடற்கரியது. இளம் மாங்காயை துண்டுகளாக்கி, உப்பு, மிளகாய்ப் பொடி துாவி சுவைக்கும் பெண்களின் மகிழ்ச்சியும் வர்ணிக்க இயலாதது.மாம்பழத்தில்...மஞ்சள் நிறமிருப்பதால், பப்பாளியில் உள்ளது போல், 'கரோட்டின்' சத்து நிறைந்துள்ளது.'வைட்டமின் - ஏ' சத்து அதிகமுள்ளதால் பார்வை கோளாறு சீராகும்; கண் கூர்மை பெறும்; மாலைக்கண் நோய் மறையும்.பொட்டாஷியம் சத்து நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 'வைட்டமின் - சி' நிறைந்துள்ளதால் சருமம் பொலிவு பெறும். ரத்தக் குழாய்களில் சுருங்கி விரியும் தன்மையை அதிகரித்து, இதயக் கோளாறை தடுக்கும். புதிய ரத்த அணுக்கள் உற்பத்தியைத் துாண்டும்.பித்த நீர் சுரப்புக்கு உதவும்; இரைப்பையை கிருமிகள் தாக்காமல் தடுக்கும். நரம்புத் தளர்ச்சியை தடுக்கும். மாம்பழச்சாறுடன் தேன் கலந்து பருகி வர, நரம்பு மண்டலம் வலுப்பெறும். மலம் இளகும்; பசியை துாண்டும். மாங்காயுடன், உப்பு சேர்த்து சாப்பிடுவதால் கோடையில் தாகம் தணியும். வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு, மூலக்கடுப்பு, அஜீரணம் போன்ற உபாதைகள் தீரும்.* மாவடுவுடன், உப்பு, தேன் தொட்டு உண்ணலாம்* மாந்தளிரை முதல்நாள் இரவு ஊறப் போட்டு, காலையில் வடிகட்டி, தண்ணீரை குடிக்கலாம் * மாங்கொழுந்து, வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் போக்கு போன்ற கோளாறுகளை நீக்கும்* மாஞ்சருகை எரித்து, புகையை முகர்ந்தால் தொண்டை நோய்கள் கட்டுப்படும்* மாஞ்சருகு சாம்பல் தீப்புண்ணை ஆற்றும்* பழங்களை கழுவி, தோல் சீவிய பின் உண்பது நல்லது.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கேற்ப, மாங்காய் அதிகம் தின்றால், தொண்டை எரிச்சல் ஏற்படும். மாங்காயோ, மாம்பழமே தின்றவுடன், தண்ணீர் குடிக்க கூடாது. தரமான மாம்பழங்களை சுவைத்து நலன் பெறுங்கள்.