உள்ளூர் செய்திகள்

வலையில் ஒரு இதயம் (4)

முன்கதை: மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாள் மாணவி, ஸ்ருதி. அம்மாவுடன் மன நல மருத்துவரை சந்திக்க சென்றாள். எளிமையாக அறிவுரை கூறினார் மருத்துவர் அருணா. இனி - ''இது உனக்கு மட்டுமல்ல; உன் அம்மாவுக்கும் பொருந்தும்; இந்த வட்டத்தில இருக்கக் கூடிய நபர்களால ஏற்படும் சின்னச்சின்ன சந்தோஷங்களையும், வருத்தங்களையும், உரசல்களையும் எப்படி அணுகுறோம்ங்கிறத வச்சுத்தான், வாழ்க்கையும், மனநிலையும் நிர்ணயிக்கப்படுகிறது... ''இந்த வட்டத்திற்குள் ஏற்பட கூடிய பிரச்னைகளையும், இருக்க கூடிய நபர்களையும் அணுகுற விதத்தை உணர்த்துறது மட்டுமே என்னோட பங்கா இருக்கும். அந்த அணுகுமுறை சரியா, தவறாங்கிறத புரிஞ்சு, நீ தான் நடந்துக்கணும்...'' என்று நிறுத்தினார் அருணா.அமைதியாய் கவனித்து கொண்டிருந்தாள் ஸ்ருதி.''இரண்டு நாட்களுக்கு பின், திரும்பவும் சந்திக்கலாம்; அப்போதிருந்து கவுன்சிலிங் ஆரம்பிக்கலாம்...'' என்றார் அருணா.பின், ''உன் அலைபேசி எண்ணை தெரிந்து கொள்ளலாமா ஸ்ருதி...'' என ஆங்கிலத்தில் கேட்டார். அவளது அலைபேசி எண்ணை வாங்கினார். இருவரும், விடைபெற்றனர்.சற்று நேரத்தில், மருத்துவர் அருணா அலைபேசியை எடுத்தார். எதிர்முனை ஏதோ வினவ, ''அந்த ரகசியத்தை சொல்லல...'' என்றார்.எதிர்முனையில், ஸ்ருதியின் அத்தை ப்ரியா இருந்தாள். ''நாம தோழிகள் என்று சொல்லி இருந்தீங்கன்னா, சுகந்தி அக்கா, அப்படியே ஓடிப் போயிருப்பாங்க...'' என்றாள். அருணா சிரித்தார்.''சுகந்தி கிட்ட கொஞ்சம் பிரச்னை இருக்கு; குழந்தைகள சுதந்திரமா விட விரும்பல... இந்த மனநிலை தான், இடைவெளியை ஏற்படுத்தியிருக்கு... ரெண்டு மூணு சிட்டிங் போனா சரி செய்துடலாம்...'' நம்பிக்கையாய் கூறினார்.''கண்டிப்பா ஸ்ருதி ஒத்துழைப்பா...'' ''அப்போ சுகந்தி நல்ல அம்மா இல்லையா...''சிரித்தார் அருணா. ''நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்லையே; எல்லாரும் இயல்பானவங்க தான்; சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறிக்குவாங்க...'' ''சரியா சொல்றீங்க...'' என்று உரையாடலை முடித்தார் அருணா.ஸ்ருதியும், சுகந்தியும் வீட்டுக்கு வந்தனர்.தன் அறைக்கு வந்தாள் ஸ்ருதி. அதே அறையை தான், அவள் தம்பி சூர்யாவும் பயன்படுத்தி வந்தான். படுக்கையில் விழுந்ததும் கல்லுாரி நினைவுகளில் மூழ்கிப் போனாள். வெறுமை மனதைச் சூழ்ந்தது. அதற்கு காரணம் விக்ரம்.அம்மாவும், அப்பாவும் அவளை விடுதியில் விட்டு போன நாள் நன்றாக நினைவிருக்கிறது. அன்றிரவு அத்தையிடம் பேசினாள்.'எப்படி இருக்கடா ஸ்ருதி குட்டி...''புது இடம் ஒரு மாதிரியா இருக்கு அத்தை...''கஷ்டமா இருக்கா...' 'சொல்ல தெரியல; வித்தியாசமா உணர்றேன்; விடுதலை உணர்வு இருக்கு; அதே சமயம், சிறைபிடிக்கப்பட்ட மாதிரியும் இருக்கு...''போக போக சரியாகிடும்...' 'எங்க போற, என்ன செய்ற அப்படின்னு தொந்தரவு செய்த அம்மா கிட்ட இருந்து விடுதலை கிடைச்சிருக்கு. ஆனா, சிறை மாதிரி இருக்கு விடுதி. அங்க வீடு முழுசும் என்னோடதா இருந்தது; இங்கே ஒரு அறைக்கு, ரெண்டு பேரு... என்னோட இடம் சுருங்கி போச்சு அத்தை...''அறைக்கு ரெண்டு பேருன்னா, உன் கூட இருக்க போற அந்த பொண்ணு வந்தாச்சா...' சிரித்தாள் அத்தை ப்ரியா.'வந்திருக்கிறா... டில்லி பொண்ணு; அவங்க அம்மா, மத்திய அரசில் அதிகாரியா இருக்காங்க; பேரு பூர்ணா...' என்றாள் ஸ்ருதி.'அவ அம்மா பேரா...' என்றாள் ப்ரியா.'உங்களுக்கு எப்பவும் கிண்டல் தான் அத்தை; பூர்ணாங்கிறது அந்த பொண்ணு பேரு...''டில்லி பொண்ணுங்கிற... தமிழ் பேரு மாதிரி இருக்கு...''அவங்க தெலுங்குகாரங்க; பிறந்தது ஹைதராபாத்; ஆனா, இப்போ டில்லியில இருக்காங்க...''ஆக உனக்கு துணை கிடைச்சிடுச்சு...''ஆமா அத்தை... அவ பேச ஆரம்பித்ததுமே, 'ஒன்லி தமிழ் அன்ட் இங்கிலீஷ் மாலும்...' அப்படின்னு சொல்லிட்டேன்...' என சிரித்தாள் ஸ்ருதி.அத்தையிடம் பேசியது உற்சாகம் தந்தது. பூர்ணாவுக்கு தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகள் தெரிந்திருந்தன. விடுதி வாழ்க்கையும் புதிதல்ல. இருவரும் அலைபேசி எண்களை பரிமாறினர். ஸ்ருதியுடன், முகத்துடன் உரசி சிரித்தபடி, இரண்டு விரலை காட்டி எடுத்த, 'செல்பி' படத்தை, முகநுால் பக்கத்தில் பகிர்ந்தாள் பூர்ணா. இந்த பதிவு, ஸ்ருதியின் வாழ்க்கையை புரட்டி போட போகிறது என்பதை அப்போது உணரவில்லை.- தொடரும்...ரவி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !