காப்பியடித்தவர்களுக்கு பாடம்!
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஸ்ரீனிவாசராவ் உயர்நிலைப் பள்ளியில், 1964ல், 11ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியர் பெயர், பட்டாபிஷேகம். மாதந்தோறும் தேர்வு நடத்தி, நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவர்களை ஊக்குவித்து, புத்தகங்களை பரிசளிப்பார். தேர்வுக்காக கரும்பலகையில் கேள்விகளை எழுதிய பின், மாணவர்களை கவனிக்காதது போல், நாளிதழ் படித்துக் கொண்டிருப்பார். ஒருமுறை தேர்வு நடந்து கொண்டிருந்தது. அவர் நாளிதழ் வாசித்துக் கொண்டிருப்பதாக எண்ணி, கடைசி பெஞ்சில் இருவர் காப்பி அடித்தனர். நாளிதழில், ஒரு ரூபாய் நாணய அளவில் துளையிட்டு, மாணவர்களைக் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார்; இருவரும் மாட்டிக் கொண்டனர். அவர்களுக்கு தண்டனையாக, வெயிலில் நிற்க வைத்தார். இது, மற்ற மாணவர்களுக்கு, 'நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள கூடாது' என்ற பாடத்தை கற்று தந்தது. மத்திய அரசு துறையில், உயர் அதிகாரியாக பணியாற்றி, ஓய்வு பெற்றேன். இப்போது, 70 வயதாகிறது. அந்த ஆசிரியர் கற்று தந்ததை, இப்போதும் வாழ்வில் கடைபிடிக்கிறேன்.- எம்.கிருஷ்ணன், சென்னை.தொடர்புக்கு: 94441 66599