அதிமேதாவி அங்குராசு! - இலைகளின் நடனம்!
தென்னை, நீண்ட இலை கீற்றுக்களை உடையது. இதய வடிவில், இலைகளை தாங்கியுள்ளது அரச மரம். மெல்லிய, குறுகிய இலைகளை உடையது வேம்பு; நீண்ட அகன்ற இலையுடன் காணப்படுகிறது வாழை. இப்படி தாவர இலை வடிவங்கள் பலவாறாக காணப்படுகின்றன. அதற்கு உரிய காரணத்தை பார்ப்போம்...தாவரங்களின் சமையலறை தான் இலை. இங்கு, தாவரத்துக்கு தேவையான உணவு தயாரிக்கப்படுகிறது. அந்த பணிக்கு ஏற்ப இலை வடிவம் மற்றும் அளவை, இயற்கை உருவாக்கியிருக்கிறது. தாவரம் உணவு தயாரிக்க, பச்சையம், சூரிய ஒளி, நீர், தாது உப்புக்கள், கார்பன்- டை- ஆக்சைடு என்ற கரியமில வாயு ஆகியவை தேவை. இதில், நீர், தாது உப்புக்கள் பூமியிலிருந்து வேரால் உறிஞ்சப்படுகின்றன. சூரிய ஒளி மற்றும் கார்பன்-டை- ஆக்சைடு இலை வழியாக கிடைக்கிறது.இலையின் மேற்பரப்பு சூரிய ஒளியை கிரகிக்கிறது. இலையில், 'ஸ்டோமாட்டே' என்ற துளை வழியாக, கார்பன்-டை- ஆக்சைடு உட்செல்லும். அதற்காக துளைகள் திறக்கும் போது, மரத்தில் இருக்கும் நீர் வெளியேறும். இதனால், தாவரத்தின் வெப்பநிலை அதிகரிக்கும். இதை தவிர்த்து வெப்பத்தை சமநிலையில் பேணும் பொறுப்பு இலைகளுக்கே உண்டு. எனவே தான், சூழ்நிலைக்கு ஏற்ப, பல வடிவம், அளவுகளில் காணப்படுகின்றன தாவரங்கள்.மழைக்காட்டில் பல்வேறு வகை தாவரங்கள் வளரும். இந்த காட்டில் வெளி அடுக்கில் சூரிய ஒளி அதிகமாக இருக்கும். அங்கு வளரும் மரங்களின் இலை மிக சிறிதாகவும், சிக்கலான விளிம்பு, மடல்களுடன் காணப்படும். குறைந்த அளவில் ஒளியை பெற ஏதுவாக அவை அமைந்திருக்கும்.அதே காட்டில், கீழ் அடுக்கில் வளரும் தாவரங்களின் இலை பெரிதாகவும், மேற்பரப்பு அகன்றும் காணப்படும். ஒளியை அதிகம் கிரகிக்கும் வகையில் அவை அமைந்திருக்கும்.வறண்ட நிலத்தில் வளரும் தாவரங்களின் இலை, நீண்டு ஊசி போல் காணப்படும். இவற்றின் மேற்பரப்பு மெழுகுபூச்சுடன் குழி விழுந்திருக்கும். நீர் வெளியேறுவதை தடுத்து, வெப்பத்தை தாங்க ஏற்றவாறு அவை அமைந்திருக்கும்.அதிகமாக காற்று வீசும் பகுதியில் வளரும் தாவரங்களில் ஒன்று தென்னை; நீண்ட கீற்று போன்ற இலைகளை உடையது. இதன் வழியாக காற்று எளிதாக கடந்து செல்லும். பெருங்காற்று வீசினாலும் பாதிக்காமல் இது தாக்குப்பிடிக்கும்.நீரில் வளரும், தாமரை, அல்லி, ஆம்பல் போன்ற தாவரங்களின் இலை தண்ணீருக்கு மேல் இருக்கும். அங்கு தான், தேவையான ஒளி, காற்று கிடைக்கும். இவை, காற்றுப் பைகளுடன் கூடிய தடிமன் இலைகளைக் கொண்டிருக்கும்.ஒரு தாவரத்தின் இலை வடிவத்தை கவனித்தால், அது வாழும் சூழல், அங்கு கிடைக்கும் வளங்களை எளிதாக அறியலாம். குழந்தைகளே... இதை மனதில் கொண்டு, இனி தாவரங்களை உற்று நோக்குங்கள்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.